புதுடெல்லி: என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இருந்து அரசியலமைப்பு முன்னுரை நீக்கப்பட்டதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் புகார் ஆதாரமற்றது என்று ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடப்புத்தகங்களில் இருந்த அரசியலமைப்பு முன்னுரை நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் என்சிஇஆர்டி பாடத்திட்ட ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் ரஞ்சனா அரோரா நேற்று முன்தினம், பாடப்புத்தகங்களில் இருந்து அரசியலமைப்பு முன்னுரை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது. இது உண்மையல்ல என்று கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பதிவில்,‘‘கல்வியை பொய் அரசியலுக்கு பயன்படுத்துவதும், குழந்தைகளின் உதவியை பெறுவதும் காங்கிரஸ் கட்சியின் கேவலமான மனநிலையை காட்டுகின்றது. மெக்காலேவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் கல்வி முறையை எப்போதும் வெறுக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.