கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, என்சிசி முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் நிர்வாகி, பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, என்சிசி முகாம் நடைபெற்றது. இதில், அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தங்கி தினமும் முகாமில் பங்கேற்றனர்.
இந்நிலையில், என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயதுடைய 8ம் வகுப்பு மாணவி, கடந்த 8ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கி கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணியளவில் என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், அந்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பள்ளி முதல்வர் சதீஷ்குமாரிடம், அந்த மாணவி தெரிவித்துள்ளார். அவர் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு, அந்த மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்ஐ சூர்யகலா விசாரணை நடத்தி, போக்சோ பிரிவின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர், நேற்று நேரில் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வரான திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ்குமார்(35), ஆசிரியை ஜெனிபர் (35), பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளர்களான சக்திவேல்(39), சிந்து(21), சத்யா(21), சுப்பிரமணி(54) ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான சுப்பிரமணி முன்னாள் சிஆர்பிஎப் வீரர் ஆவார்.
தலைமறைவான முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் திம்மாபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சிவா(எ) சிவராமன்(28) என்பவரை கோவையில் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். சுதாகரை தேடி வருகின்றனர். சிவராமன் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்ததும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
* பல மாணவிகளுக்கு நாம் தமிழர் நிர்வாகி பாலியல் தொல்லை
மாணவியை பலாத்காரம் செய்து கைதான காமக்கொடூரன் சிவராமன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், தர்மபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கும் என்சிசி பயிற்சியாளராக சென்றுள்ளார். அங்கும் முகாமின் போது பல மாணவிகளுக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவுகளை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.