கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, என்சிசி முகாமின் போது, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலி பயிற்சியாளரான நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், சிவராமன் பள்ளியில் படித்த காலத்தில் என்சிசி மாணவராக இருந்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து என்சிசி அலுவலராக மோசடி செய்துள்ளது தற்போது வெளியாகி உள்ளது.
குறிப்பாக, புகாருக்குள்ளான தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி அளிக்க மாணவி ஒருவருக்கு தலா ரூ.1500 வசூல் செய்துள்ளார். இந்த பணத்தை கொண்டு, மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் தயார் செய்து, அதில் என்சிசி ஸ்டிக்கர்களை போலியாக ஒட்டி வழங்கியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுதாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவி பலாத்காரத்திற்குள்ளான பள்ளிக்கு, நேற்று 2வது நாளாக விடுமுறை விடப்பட்டது.
சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கைதான சிவராமன் போலீஸ் பிடியில் இருந்து நேற்று முன்தினம் தப்பமுயன்ற போது கீழே விழுந்ததில் கால் முறிந்தது. அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில கல்வி நிறுவனங்களில் போலியாக முகாம் நடத்தி உள்ளதாகவும், போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அது குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மாணவர் படையின் (என்சிசி) ஒருங்கிணைப்பாளர் கோபு கூறியதாவது: என்சிசி மூலம் பள்ளி, கல்லூரியில் மாணவ, மாணவிளுக்கு பயிற்சியளிக்க, ராணுவத்தில் முறையாக 6 மாதம் பயிற்சி பெற வேண்டும். பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு, சேலத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள என்சிசி அலுவலகத்தில் அனுமதி பெற்ற அலுவலர்கள் நேரடியாக ஒருங்கிணைந்து முகாம் நடத்துவார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த வரை, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பாரூர், நாகரசம்பட்டி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஓசூரில் தனியார் பள்ளி ஒன்றிலும் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. சிவராமன் பள்ளியில் படிக்கும்போது தேசிய மாணவர் படையில் மாணவராக இருந்துள்ளார்.
அவர், என்சிசி முகாம் நடத்துவதற்கு தகுதியற்றவர், அரசியல் கட்சி ஒன்றில் இருந்த பதவியை வைத்து, தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளார். மேலும், பயிற்சி பெறும் போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை என்சிசியே வழங்கும், தனிப்பட்ட முறையில் யாரும் வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.