சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜ சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, சட்டமன்ற உறுப்பினர் வானதி னிவாசன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா மற்றும் பாஜவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குச்சாவடிகளில் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக சென்று வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.
பாஜ நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘‘நம்முடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் அல்ல 2029ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் தான். அதுதான் நமக்கு முக்கியம். சென்னையில் கொக்கைன் சாதாரணமாக கிடைக்கிறது. 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும் அதற்கான வேலைகளை உள்துறை அமைச்சர் பார்த்துக் கொள்வார். 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்றார்.