நெல்லை தொகுதி பாஜ வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் கொண்டு சென்ற பணம் ரூ.4 கோடி பிடிபட்டது. இதையடுத்து அவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில், நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆலங்குளம் மற்றும் கடையம் வட்டார பகுதிகளில் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொண்டார். இடைகால் பகுதியில் அவர் பிரசார வாகனத்தில் சென்றபோது பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். மேலும், நயினார் நாகேந்திரன் கார், கட்சி தொண்டர்களின் வாகனங்களை சோதனை செய்தனர்.