Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டீஸ்கரில் போலீசுடன் துப்பாக்கி சண்டை: நக்சல் முக்கிய தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக் கொலை

நாராயண்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல்களின் முக்கிய தலைவர் பசவராஜூ உட்பட 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்-பிஜாப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள அபுஜ்மத் காட்டுப் பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் சிறப்பு காவல் படை ஆகியவற்றின் கூட்டு குழு, சம்பந்தப்பட்ட வனப்பகுதிக்கு சென்றது. அங்கு நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து சுற்றிவளைத்த பாதுகாப்பு படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவனும், பாதுகாப்பு படையினரிடம் சிக்காமலும் தலைமறைவாக இருந்த நக்சல்களின் முக்கிய தலைவரான நம்பாலா கேசவராவ் என்கிற பசவராஜூ இந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனை பாதுகாப்பு படையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.  சம்பவ இடத்தில் இருந்து ஏகே-47, தானியங்கி ஆயுதங்கள், வெடிபொருட்கள், நக்சல் பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. நக்சல்கள் நடத்திய துப்பாக்கி

சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்களில் ஒரு வீரர் காயமடைந்தார். என்கவுன்டரை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் சட்டீஸ்கரில் 200 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூர், நாராயண்பூர், தண்டேவாடா மற்றும் கொண்டகோன் மாவட்டத்தை உள்ளிடக்கிய பாஸ்டர் மண்டலத்தில் மட்டும் 183 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் , 27 நக்சல்களை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்களின் இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்காக பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். எங்களது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்றமான வாழ்க்கையை உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சல்களுக்கு எதிரான மூன்று தசாப்த கால போரில் பொது செயலாளர் அந்தஸ்தில் இருந்த ஒரு தலைவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டுள்ளார்.

நக்சல் தலைவர் பிடெக் பட்டதாரி

சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பசவராஜூ நக்சல்களுக்கு சக்திவாய்ந்த பொதுச்செயலாளராக இருந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த பசவராஜூ வாராங்கல் பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றவர். பசவராஜூ தலைக்கு போலீசார் ரூ.1 கோடி சன்மானம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், உமேஷ் மற்றும் காம்லு என மாற்று பெயர்களால் அறியப்பட்ட பசவராஜூ 1970களில் சாதாரண அமைப்பாளராக ஆயுத இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார்.

கடந்த 1992ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் போர் அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினராக பசவராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். பொது செயலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்னதாக பல ஆண்டுகள் மாவோயிஸ்ட் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். ராணுவ பயிற்சி அளிப்பதிலும், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளை கையாளுவதிலும் நிபுணராக கருதப்படுகிறார். பசவராஜூவின் வயது மற்றும் தோற்றமானது இன்னும் ஊகிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வருகின்றது. அவருக்கு சுமார் 71 வயது வரை இருக்கலாம் என பாதுகாப்பு ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.