ராய்ப்பூர்: வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகள் அட்டூழியத்துக்கு முடிவு கட்டப்படும் என்றும் நக்சலைட்டுகளுக்கு எதிராக இறுதி தாக்குதல் நடத்த வேண்டிய தருணம் வந்துள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறினார். நக்சலைட்டு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான சட்டீஸ்கர்,ஜார்க்கண்ட், மபி, ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் டிஜிபிக்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று ராய்ப்பூரில் நடந்தது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 7 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அமித் ஷா,‘‘நக்சலைட்டுகளின் வன்முறை ஜனநாயகத்துக்கு மிக பெரிய சவாலாக உள்ளது.நக்சலைட்டுகளின் தாக்குதலில் 17,000 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 2004-2014 மற்றும் 2014-2024 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நக்சலைட்டுகள் வன்முறை 53 சதவீதம் குறைந்து உள்ளது. இடது சாரி தீவிரவாத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அவர்களுக்கு எதிராக இறுதி தாக்குதல் நடத்த வலுவான உத்தி வகுக்கப்பட வேண்டும். வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலைட்டுகள் தொல்லை முற்றிலும் அகற்றப்பட்டு விடும். எனவே,நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட வேண்டும். நக்சலைட்டுகள் சரண் அடைவதற்கு புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.