அம்பத்தூர்: நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசுப் பேருந்து ஓட்டுநர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(52), அரசுப் பேருந்து ஓட்டுநர். இந்நிலையில், மாணிக்கம் நேற்று மதுரையில் இருந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்தை நிறுத்திவிட்டு மாணிக்கம் ஓய்வு அறைக்கு சென்றார். அப்போது முதல் மாடிக்கு அருகே உள்ள நாவல் மரத்தில் அதிகளவில் நாவல்பழம் இருப்பதைக் கண்டார். அப்போது, கட்டிடத்தின் மேலே ஏறி நாவல் பழத்தை பறித்துக் கொண்டிருந்தபோது, மாணிக்கம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதில், மாணிக்கம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அலறிக்கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த ஊழியர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணிக்கத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணிக்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.