ஜெய்ப்பூர்: காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் கொன்று குவித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை சிலர் கசியவிட்டதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராஜஸ்தான் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், சந்தேகத்திற்கிடமானவர்களின் சமூக ஊடக கணக்குகளை போலீசார் கண்காணித்தனர். அப்போது, டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வரும் விஷால் யாதவ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஜெய்ப்பூர் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை ஆய்வு செய்த போது, பிரியா சர்மா என்ற போலிப்பெயரில் இன்ஸ்டாகிராமில் வலம் வந்த பாகிஸ்தான் உளவாளியுடன் இவர் நெருக்கமான தொடர்பில் இருந்தது உறுதியானது.
ராணுவ ரகசியங்கள் குறிப்பாக கடற்படையின் நடமாட்டம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு விஷால் யாதவ் விற்றது உறுதியானது.
ஆபரேஷன் சிந்தூரின்போது, விஷால் பல முக்கிய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஷால் யாதவ் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர் என்பதும், இதனால், அவர் கடுமையான கடன் சுமையில் இருப்பதும் தெரியவந்தது. கடனை திருப்பி அடைப்பதற்காக அவர் சமூக வலைதளத்தில் தனக்கு அறிமுகமான பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை விற்று பணம் பெற்றுள்ளார். அவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. மேலும் கிரிப்டோ கரன்சி மூலமும் அவர் பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இதையடுத்து, விஷால் யாதவை கைது செய்த ராஜஸ்தான் சிஐடி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.