சென்னை: மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நவராத்திரி பெருவிழா இன்று தொடங்கியது. திருக்கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் நவராத்திரி பெருவிழா இன்று (15.10.2023) தொடங்கியது. இவ்விழாவினை முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருக்கோயில்கள் சார்பில் சித்தர்களுக்கும், அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலார், தெய்வப் புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தர் ஆச்சாரியார் போன்ற அருளாளர்களுக்கும் திருக்கோயில் சார்பில் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கவும், வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் திருக்கோயிலை புனரமைக்கவும் விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு 5 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவினை பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது. உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கொலுவை பார்வையிட்டதோடு, இன்று நடைபெற்ற சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (16.10.2023) கன்யா பூஜையும், அதனைத் தொடர்ந்து தேவி மஹாத்மியம், நவாவரண பூஜை. லலிதா சகஸ்ரநாமம், திருவிளக்கு பூஜை, சௌந்தர்ய லகரி, சுஹாசினி பூஜை, இசை வழிபாடு, அபிராமி அந்தாதி என தினந்தோறும் ஒரு வழிபாடும், திரையிசை பாடகர் வினயா கார்த்திக் ராஜன் குழுவினர் இன்னிசை, இசைத் தென்றல் கலைமாமணி வீரமணி ராஜீ குழுவினரின் பக்தி இன்னிசை, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் சௌமியா அவர்களின் ஏற்பாட்டிலான குழு இசை நிகழ்ச்சி, இசைப்பெரொளி காயத்ரி வெங்கட்ராகவன் குழுவினரின் பக்தி இன்னிசை, கந்தர்வ கான இளவல் வீரமணி கண்ணன் குழுவினரின் இன்னிசை,
தமிழிசைச்சுடர் சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினரின் பக்தி இன்னிசை, இசைப்பேரரசி நித்யா மகாதேவன் குழுவினரின் பக்தி இன்னிசை. இசைப் பேரொளி மஹதி வழங்கும் கர்நாடக இன்னிசை, சுருதிலயா இசைச்குழுவினரின் இன்னிசை என தினந்தோறும் ஒரு இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க. மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர்,ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.