நெல்லை : தசரா பண்டிகை நாளை (14ம் தேதி) அம்மன் கோயில்களில் கோலாகலமாக துவங்குகிறது. இதையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் லட்சார்ச்சனை நாளை (14ம் தேதி) துவங்கி 28ம்தேதி வரை இரவு 7 மணிக்கு நடக்கிறது. நவராத்திரி விழாவில் சோமவார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. நவராத்திரி விழா வரும் 15ம்தேதி துவங்கி 23ம்தேதி வரை நடக்கிறது.
இதற்காக இம்மண்டபத்தில் பக்தர்கள் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன், காயத்திரி தேவி உள்பட பல்வேறு அம்மன் சிலைகள், தசாவதார சுவாமி சிலைகள், அஷ்டலட்சுமி, பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், வெங்கடாசலபதி, திருமண கோஷ்டி பொம்மைகள், நாதஸ்வரம் கலைஞர் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள், சுவாமி சிலைகளை 9 படிக்கட்டுகள் அமைத்து அடுக்கி வைக்கும் பணியில் கொலு வழிபாட்டு பக்தர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காந்திமதி அம்பாள், நெல்லையப்பர் மர சப்பரத்தில் நடுநாயகமாக வீற்றிருந்து கொலுவுக்கு அழகு சேர்க்கும் வகையில் பக்தர்கள் காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆயிரக்கணக்கான பொம்மைகள் கொண்டு வரப்பட்டு அடுக்கி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் சோமவார மண்டபத்தில் கொலு சிறப்பு வழிபாடு நடக்கிறது.