நன்றி குங்குமம் தோழி
உயிர்க்கொல்லியான புகையிலையின் கதை!
‘‘பேருதான் பொய்யில..! (புகையிலை)…
ஆளைக் கொல்றது மட்டும் மெய்யில..!”
– இது கிராமங்களில் உள்ள வழக்கு மொழி.
‘‘புகைப்பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்…”
– இது திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கிடையே
இடம்பெறும் எச்சரிக்கை விளம்பரம்.
‘‘மரணத்தை பெருமளவு தடுக்க முடியும்…
புகையிலை ஒன்றை மட்டும் மனிதன் தவிர்த்தால்!”
– இது உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைப் பிரகடனம்..!
இப்படி உலகம் முழுவதும் அனைவராலும், அனைத்து அமைப்புகளாலும் எச்சரிக்கை விடுக்கப்படும் அளவுக்கு அதிகரித்து வரும் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு முதற் காரணமாக விளங்குவதுதான் புகையிலை. உண்மையில் புகையிலை மூலிகை மருந்தாகத்தான் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. உயிரைக் காக்கும் இந்த அருமருந்தை விஷமாக்கியதே மனிதர்கள்தான் என்றும் கூறப்படுகிறது. உண்மை நிலையை அறிய, புகையிலையின் வரலாற்றையும், அதன் நன்மை-தீமைகளையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
ஆங்கிலத்தில் Tobacco, தமிழில் பொகையில, பொகாக்கு, தம்பாக்கு என அழைக்கப்படும் புகையிலையின் தாவரப்பெயர் Nicotiana tabacum. தோன்றிய இடம் அமெரிக்கா. புகைப்பதற்கான இலை என பொருள் தரும் Tobacco, கரீபியன் மக்கள் பயன்படுத்திய Tabago என்ற புகைக்கும் குழாயிலிருந்து பெறப்பட்டது என்கின்றனர். அரபி மொழியில் போதையை விளைவிக்கும் தாவரம் என இதற்குப் பொருளாம். ஆனால் உண்மையில் மிளகு, தக்காளி, உருளை, சுண்டைக்காய், கத்தரிக்காய் போன்ற Solanaceae குடும்பத்தைச் சார்ந்ததுதான் புகையிலை.
புகையிலையின் வரலாறு, மனித இனம் தோன்றிய, அதாவது, கி.மு. 6000 ஆண்டிலிருந்து தொடங்குகிறது. காய்ந்த இலையின் புகை, தங்களது வேண்டுதல்களை கடவுளிடம் நேரடியாக கொண்டு செல்லும் என்று நம்பிய அமெரிக்கப் பழங்குடியினர், தங்களது நிலங்களில் செழித்து வளர்ந்த இலைகளை, கடவுளுக்கு படைத்தது மட்டுமன்றி, அதன் சாற்றை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். கரீபியன் மக்களும் பச்சைப் புகையிலையை மூலிகையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
1492 ல் கப்பலேறி வந்த கொலம்பஸிடம் அமெரிக்கப் பழங்குடியினர் பரிசாக இதைத்தர, புகையிலையின் உலகப் பயணம் தொடங்கியுள்ளது. அடர் பச்சை நிறத்தில், அலங்காரச் செடியாக, ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்த புகையிலை, அதன் மருத்துவ குணங்களால், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மூலிகைச் செடியாக உருவெடுத்திருக்கிறது. 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் சிறந்த வலி நிவாரணியாகவும், விஷ முறிவு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததுடன், மலேரியாக் காய்ச்சல், மூச்சுத்திணறல், பல் வலி, தலைவலி, உணவுக்குழாய் அழற்சி, நோய்த்தொற்று, குடற்புழுக்கள், மூலநோய், மன அழுத்தம் போன்றவற்றுக்கு உள்மருந்தாகவும், சிரங்கு, தோல் அழற்சி, மூட்டு வீக்கம், வெட்டுக் காயங்களுக்கு மேற்பூச்சாகவும், தலை முதல் கால் வரை 65 வகையான நோய்களுக்கு மருந்தாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Trigeminal Neuralgia எனும் குணப்படுத்த முடியாத ஒற்றைத் தலைவலி, புற்றுநோய்கள் உண்டாக்குகிற வலி-வேதனைகளுக்கு வலி நிவாரணியாகவும், மூளைத்தேய்வு நோய்களான அல்சைமர், பார்க்கின்ஸன் நோய்களுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஜீன் நிகோட் எனும் ப்ரெஞ்சு தூதுவர், ஒற்றைத் தலைவலியில் அவதிப்பட்ட தனது நாட்டின் மகாராணி கேத்தரினுக்கு, போர்ச்சுகீஸ் நாட்டிலிருந்து புகையிலையைப் பொடித்துத் தர, குணமான மகாராணி, தனது அரசவையில் நிகோட்டிற்கு மரியாதை செலுத்தியதோடு, அதன் விதைகளைத் தருவித்து விளைவித்ததாகவும், இதனால் புகையிலையின் தாவரப்பெயரில் நிகோட் வந்தது என்றும் கூறப்படுகிறது.
மூலிகை மருந்தாக அறிமுகமான புகையிலை, அதன் மருத்துவ குணங்களைத் தாண்டி, அது கொடுத்த உற்சாக உணர்வுகளாலும், மகிழ்வான மனநிலையாலும், மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்தி, மாற்றமுடியாத போதைப் பொருளாக மெல்ல மெல்ல உருவெடுத்தது எனலாம். முதலில் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகள், பின் அரபு நாடுகள், கொரியா, சீனா, ஜப்பான், இந்தியா, தாய்லாந்து என போதையின் பாதையை விரிவுப்படுத்தியது.
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலர்ந்த இலைகள் நேரடியாக சுருட்டப்பட்டும், பொடியாக்கிய புகையிலைத் துகள்கள் இலை அல்லது பிரத்யேக பேப்பருக்குள் இடம்பிடித்தும், சுருட்டு, சிகரெட் என வடிவம் பெற்று, மனிதனின் ஆறாம் விரலாய் மாறியது. இதில் கியூபா மற்றும் துருக்கி நாட்டின் சிகார் உலகப்புகழ் பெற்றன.தனக்கு மிகவும் பிரியமான கியூபன் சிகாரை இறுதி நாள்வரை விடாமல் புகைத்தவர் க்யூபாவின் புரட்சி நாயகன் சேகுவேரா.
உலகப்போரின்போது சிகரெட் தயாரிப்பு இயந்திரங்கள் கண்டறியப்பட்டு, ‘படை வீரர்களின் புகை’ என்ற தனி அடையாளத்தைப் பெற்ற சிகரெட், உலக வணிகத்தில் கச்சா எண்ணெயை பின்னுக்குத் தள்ளி, புகையிலையும் சிகரெட்டும் வேறல்ல என்கிற நிலையை எட்டியது. முகலாயர் ஆட்சியின் போது போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வாயிலாக ஹூக்கா, சிகார் என்கிற பெயர்களுடன் நமது நாட்டிற்குள் நுழைந்த புகையிலை, சிகரெட், பீடி, பான், குட்கா, மூக்குப்பொடி, வெற்றிலை என்ற புதிய அடையாளங்களுடன் அரசவையில் தொடங்கி ஏழை எளிய மக்களையும் சென்றடைந்தது.
இன்று, சீனா, பிரேசில், அமெரிக்காவிற்கு அடுத்ததாய் இந்தியாவும் புகையிலையை அதிகம் விளைவிக்கும் நாடுகளின் பட்டியலிலும், அதிகக் கொள்முதல் செய்கிற நாடுகள் வரிசையில் சீனாவுக்கு அடுத்த நிலையிலும் இருக்கிறது. விதைகள் மூலம் பயிரிடப்படும் புகையிலைக்கு, சூரிய ஒளியும், நீர் வளமும், மண் வளமும் தேவைப்படுவதால் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
அப்படி என்னதான் இந்தப் புகையிலையில் உள்ளதெனப் பார்த்தால், நிகோடின், நிகோடினிக் அமிலம், மாலிக் அமிலம், சொலினேசால் உள்ளிட்ட தாவர எண்ணெய்களும், பச்சைப் புகையிலையில் வைட்டமின் C, E, செலீனியம் மற்றும் கரோட்டின் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன என்கிறது அறிவியல். தாவர எண்ணெயான நிகோடின்தான் புகையிலையின் பற்பல குணங்களுக்குக் காரணமாக இருக்கின்றது.
புகையிலையை உட்கொண்ட அல்லது சுவாசித்த எட்டு முதல் பத்து நொடிக்குள் மூளையைச் சென்றடையும் நிகோடின், உடனடியான உற்சாக நிலையையும், தற்காலிகமாய் சுறுசுறுப்பு உணர்வையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நரம்புகளிலுள்ள நிகோடினிக் மற்றும் அசிடைல் கோலைன் ஏற்பிகளில் பதியும் இந்த நிகோடின், டோப்பமைன் உள்ளிட்ட நரம்பூக்கிகளை ஆரம்பத்தில் ஊக்கப்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து, நீண்டநேரம் நீடிக்கும் க்ளூட்டமேட்களையும், பீட்டா என்டார்ஃபின்களையும் ஊக்கப்படுத்துவதால், வலி நிவாரணம் மற்றும் கிளர்ச்சி நிலையை ஏற்படுத்துகிறது. உற்சாக நிலைக்குத் தேவையான ஆற்றலை, அட்ரீனல் சுரப்பிகள் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கூட்டி சமன்படுத்துகிறது. ஆக, ஒரேசமயத்தில் மன மகிழ்ச்சியையும், வலி நிவாரணத்தையும், மன அமைதியையும் தருவதால், கிட்டத்தட்ட கோக்கெயின், ஹெராயின் போன்ற போதை வஸ்துகளுக்கு சமமாய் பார்க்கப்படுகிறது.
புகைக்கும் போது நிகோடினானது, கோ-நிகோடின், பைரிடீன், கார்பன் மோனாக்சைடு போன்ற தாதுக்களாக உருமாறுவதால், பக்கவிளைவுகள் பல உண்டாகின்றன. சிகரெட்டுகளில் புகையிலையை பதப்படுத்துவதற்காக தார், பென்சீன், ஆர்சனிக், தையோ-சயனேட், காட்மியம் உள்ளிட்ட நான்காயிரத்திற்கும் மேலான ரசாயனப் பொருட்களும், நூற்றுக்கணக்கான நச்சுப் பொருட்களும் சேர்க்கப்படுவதால் மாரடைப்பு, பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் நோய், இரைப்பை மற்றும் குடல் அழற்சி, குழந்தையின்மை, குறை மாதக் குழந்தை, மன நோய், அனைத்திற்கும் மேலாக உயிரைக்கொல்லும் புற்றுநோயாக, மூளை, வாய்ப்பகுதி, தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை, கணையம், கல்லீரல், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள், ஆசனவாய், சருமப் புற்றுநோய் என ஒவ்வொரு உடல் உறுப்பிலும் வெளிப்பட்டு, மனித இனத்தை அழிவின் பாதைக்கு கொண்டுசெல்கிறது.
நேரடியாக புகைப்பவர்களில் நான்கு வினாடிக்கு ஒரு மரணம் என்றளவில், வருடத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் மக்களை உலகெங்கும் பலியெடுக்கும் புகையிலை, பாசிவ் ஸ்மோக்கிங் என்ற அடைமொழியோடு, அருகிலுள்ள அப்பாவிப் பெண்களையும், உதிருகின்ற சாம்பல், வீடுகளில் படியும் புகை வழியாக, ஏதுமறியாக் குழந்தைகளையும் கொன்று தீர்க்கிறது. ஆக, காய்ந்த புகையிலைச் செடிகளின் இலைகள், மனித குலத்தையே சருகுகளாக்கி விடுகின்றன.
இதனால்தான், உலக சுகாதார அமைப்பு மே 31 ஐ, ‘உலக புகையிலை எதிர்ப்பு நாளாக’ பிரகடனப்படுத்தி, புகையிலையை தவிர்ப்பதால் ‘மரணத்தை பெருமளவு தடுக்க முடியும்’ என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால், மூலிகையாக இருந்த புகையிலையினை துண்டுகளாகவும், துகள்களாகவும் மனிதன் உருமாற்ற, மனிதனையே அது முடமாக்கி நிற்கிறது. இயற்கையின் எந்தவொரு படைப்பும் மனிதன் அதனை மாற்றியமைக்கும் வரை என்பதற்கு புகையிலையே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!
மீண்டும் மூலிகையாக புகையிலையை மாற்றும் முயற்சியில் அறிவியல் வெற்றியடைந்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகள் மூலம், புகையிலையை வேளாண் அறிவியல், பயோ-டெக்னாலஜி, ஜெனிடிக் இஞ்சினீயரிங் துறைகளில் பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், சோயா மற்றும் சோளத்திலிருந்து பெறப்படும் புரதத்தைவிட புகையிலையில் இருந்து பெறப்படும் புரதத்தின் அளவு நான்கு மடங்கு கூடுதல் என்பதால், தொழிற்சாலை மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தி வருகின்றனர்.
பன்றிக்காய்ச்சல் முதலான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரிக்கவும், மரபணு நோய்கள், அல்சைமர், சர்க்கரை நோய், புற்றுநோய், ஹெச்ஐவி தொற்று என நோய்களைக் கட்டுக்குள் வைக்கும் மருந்துகளைத் தயாரிக்க உதவும், உயிரியல் இன்க்யூபேட்டராகவும் புகையிலை உதவுகிறது என்கிறது விஞ்ஞானம். இயற்கை உரங்கள், அழகு சாதனப் பொருட்கள், கால் நடைகளுக்கான உணவுகள், புரதங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், எளிதில் மறையாத கழிவுகளான GTN, PETN நைட்ரஜன் வெடிகளின் கழிவுகளை அகற்றவும், மண்ணை சீரமைக்கவும் சிறந்தது என இதன் பட்டியல் நீள்கிறது. அனைத்திற்கும் மேலாக, Green energy எனப்படும் இயற்கை எரிசக்தியை உற்பத்தி செய்ய புகையிலையை பயன்படுத்தலாம் என்ற முக்கியமான ஆய்வை தென்னாப்பிரிக்க விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
Choose only one master nature..! என்பதை புகையிலையின் வாயிலாக வலியுறுத்திக் கூறும் இயற்கை, எந்தவொரு இயற்கையின் படைப்பைப் போல, புகையிலையும் நன்மையே தருகிறது. அழிவின் கரங்களில் இதனைக் கொண்டு சேர்ப்பதும், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதும் நம் கரங்களில் மட்டுமே உள்ளது..!!
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர் : டாக்டர் சசித்ரா தாமோதரன்