நன்றி குங்குமம் தோழி
மரத்தில் காய்க்கும் டூத் பிரஷ்கள்!
காலை எழுந்தவுடன் தூக்கக் கலக்கத்துடன் பாத்ரூம் சென்று, டூத் பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டைப் பிதுக்கி, பல் துலக்கி, முகம் கழுவியவுடனே, மிண்ட் ஃப்ளேவருடன் (mint flavour) ஒரு ஃப்ரெஷ்னஸ் நமக்குள் வருமே..! அதே ஃப்ரெஷ்னஸை நமது இந்த அன்றாட டூத் பேஸ்ட்டும் டூத் பிரஷ்ஷும் இல்லாமல், குறிப்பாக எந்தவொரு ரசாயனமும் இல்லாமலே, வெறும் மரக்குச்சிகள் நமக்கு அளிக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், அதுதான் உண்மை என்கிறது, ‘உலகின் முதல் டூத் பிரஷ்’ என அழைக்கப்படுகிற மிஸ்வாக் குச்சிகள்..!அதைப்பற்றி முழுதாக அறிய, அரேபியாவின் மிஸ்வாக் மரங்களில் காய்க்கும் டூத் பிரஷ்களுடன் இன்றைய இயற்கை – 360° பயணத்தை தொடர்வோம் வாருங்கள்..!
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது நமது பாரம்பரியம் போலவே, இந்த இயற்கை டூத் பிரஷ்ஷான மிஸ்வாக் மரங்களின் கிளைகள் மற்றும் குச்சிகள், அரேபியர்களின் பாரம்பரியமாகத் திகழ்ந்து வருகிறது. ‘Tooth brush tree’ என்று ஆங்கிலத்தில் பொதுவாக அழைக்கப்படும் இந்த மிஸ்வாக்கின் தாவரப்பெயர் Salvadora persica. தோன்றிய இடம் பெர்சியா. மத்திய ஆசிய நாடு
களில், குறிப்பாக சவூதி அரேபியா, ஈரான் மற்றும் துருக்கி நாடுகளிலும், எகிப்து உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும், இந்திய துணைக்கண்டத்திலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது.
அரபு மொழியில் அராக், சிவாக், செவாக், பீலு (arak, siwak, sewak) என பற்பல பெயர்களில் இந்த மிஸ்வாக் அழைக்கப்படுவது போலவே, கோயோஜி (koyoji) என ஜப்பானிய மொழியிலும், க்வேஸம் (qesam) என ஹீப்ரூ மொழியிலும், மஸ்திக் (mastic) என லத்தீன் மொழியிலும், மலாய் மொழியில், காயு சுகி (kayu sukhi) என அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே, ‘பற்களை சுத்தப்படுத்தும் குச்சிகள்’ என்ற அரேபிய மிஸ்வாக்கின் பொருளையே தருகிறது என்பது இதன் சிறப்பம்சமாகும். நம்மிடையே குன்னி மரம் என்றும் உகா மரம் என்றும் இதனைக் குறிப்பிட்டுள்ள குறிப்புகள் தமிழில் காணக்கிடைக்கின்றன.
மிஸ்வாக் மரத்தின் சிறு கிளைகளை ஒடித்து, பென்சில் அளவிற்கு வெட்டி, முனைகளை மென்று அல்லது இடித்து, சிறு பிரஷ் போலானதும், பல் துலக்க பயன்படுத்துகின்றனர் இஸ்லாமியர்கள். பல் துலக்க மட்டுமன்றி, பற்சிதைவு, ஈறுகள் வீக்கம், பற்களின் மீது படியும் திட்டுகள் (dental plaques), வேர்க்கால்களில் சீழ் (dental abscess) ஆகியவற்றையும் தடுக்கும் மிஸ்வாக், பற்களின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதுகாக்கிறது என்கின்றனர் பல் மருத்துவர்கள்.
இதன் துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவைக்கும், பிரத்யேக மணத்திற்கும் காரணம் Salvadorine, Pinene, Carvacrol, Thymol, Pyrrolidine உள்ளிட்ட ஆல்கலாய்டுகள் மற்றும் Kaempferol, Quercetin, Rutin உள்ளிட்ட ஃப்ளேவனாயிடுகள், வைட்டமின் சி போன்றவை இதன் மருத்துவ குணங்களுக்கும் காரணமாக இருக்கின்றனவாம்.இந்தத் தாவரச்சத்துகள், பற்களை சுத்தப்படுத்தி, மூச்சுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், நுண்ணுயிரிகளால் ஏற்படும் பற்சிதைவையும், வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. மேலும், மிஸ்வாக்கின் அதிகப்படியான ஃப்ளூரைடுகள் (fluorides) மற்றும் கந்தகச் சத்து (sulphur), ட்ரை-மெத்தில்-அமைன் (trimethylamine), பென்ஃசைல் ஐசோ-தையோ-சயனேட் (benzyll thiocyanate) உள்ளிட்ட ஆன்டி-ஆக்சிடென்டுகள் பல்வேறு மருத்துவ குணங்களுக்குக் காரணமாகின்றன.
குறிப்பாக, பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை (Streptococcus, Staphylococcus, Porphyromonas, Herpes, Candida) அழிப்பதுடன், வாய்ப்பகுதியில் காணப்படும் தீங்கில்லா நுண்ணுயிரிகளை (commensal micro-biome) அழிக்காமலும் பாதுகாக்கின்றன. இதிலுள்ள Resin என்ற பிசின், பற்களின் எனாமல் மீது படிந்து, பற் தகடுகள் அல்லது திட்டுகளிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இதில் நிறைந்துள்ள சோடியம் க்ளோரைட், சோடியம் பைகார்பனேட், கால்சியம் ஆக்சைட் ஆகிய உப்புகள் பற்களுக்கு வெண்மை நிறத்தைத் தருவதுடன், பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்க்கின்றன என்பதாலேயே புகையிலை, காஃபி, டீ ஆகியவற்றினால் ஏற்படும் பற்களின் பழுப்பு நிறக் கறைகளுக்கு மிஸ்வாக் குச்சிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
அனைத்திற்கும் மேலாக, மிஸ்வாக் குச்சிகள் அவற்றின் துவர்ப்பினாலும், தாவரச்சத்துகளாலும் உமிழ்நீர் சுரப்பைத் தூண்டுவதால், பசியைத் தூண்டி, செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இப்படி, பல் ஆரோக்கியம், வாய் சுகாதாரம் மட்டுமன்றி தொண்டை வலி, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பளித்து, குரல் வளத்தையும், ஞாபகத்திறனையும் சேர்த்தே அதிகரிக்கிறது என்கிறது இயற்கை மருத்துவம். இதன் குச்சிகள் மட்டுமன்றி, வேர்கள், இலைகள், மரப்பட்டை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. குறிப்பாக மிஸ்வாக் வேர்களில் கந்தகம் மற்றும் பிற தாவரச்சத்துகள் அதிகம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
செரிமான மண்டலத்தின் நுழைவாயிலாகத் திகழும் வாய், குறிப்பாக அதன் பற்கள் ஆரோக்கியமற்று இருக்கும் போது, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளிலும் நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதாலேயே, வாய் சுகாதாரம் முக்கியமான ஆரோக்கியக் கூறாகத் திகழ்கிறது. வாய் சுகாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் மிஸ்வாக்கை, 1986ல் முதல் பல் சுகாதாரத்திற்கென்று சிறப்புப் பரிந்துரை செய்து, உலகெங்கும் இதன் பெருமையை பரவச் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
ஆனாலும், இது போன்ற குச்சிகளை பயன்படுத்தும் போது பற்களின் உட்புறங்களை சரியாக துலக்க முடியாதென்பதால், வெகு சிலரில் Gingival recession எனும் ஈறுகள் தேய்மானத்தையும், occlusion wear/tear என்கிற முன் பற்கள் தேய்மானத்தையும், நோய்த்தொற்றையும் ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது ‘International Journal of BioPharma Research’. மேலும் அடிக்கடி பற்களைக் கடிக்கும் நிலையும் (bruxism) இதில் ஏற்படலாம் என்கிறது இது.
பொதுவாக வறண்ட நிலப்பரப்புகளிலும், உவர் நிலங்களிலும் தானாக வளரும் தன்மை கொண்ட இந்த சிறு மரங்கள், சவூதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலும், சூடான், எத்தியோப்பியா, எகிப்து உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் அதிகம் காணப்படுகின்றன. நமது அருகாமை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா என இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகள் எங்கும் இவை சற்று பிரபலமாக உள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும் காணப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களின் முக்கியமான, பெருமதிப்பு மிக்க தொழுகைப் பொருளாக மிஸ்வாக் கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள் ஒருநாளில் குறைந்தது ஐந்து முறையேனும் மிஸ்வாக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுகூறும் அவர்களின் ஹதீத் (Hadith) குறிப்புகள், தூங்குமுன், விழித்தெழுந்தவுடன், தொழுகைக்கு முன், மதச் சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முன், விருந்துக்கு முன், பயணங்கள் மேற்கொள்ளும் முன்பும் பின்பும் மிஸ்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அரபு நாடுகளில் பலர் தங்கள் அலுவலகத்திலேயே மிஸ்வாக் குச்சிகளை மென்றபடி பணிபுரிவதை இப்போதும் காணலாம்.
‘‘உங்களுக்கு தனித்தனியாக டூத் பேஸ்ட், டூத் பிரஷ், மவுத் வாஷ் தேவையில்லை. இயற்கை டூத் பிரஷ்ஷான ஒரே ஒரு மிஸ்வாக் குச்சி போதுமானது” என்ற விளம்பரங்களுடன், மேற்கத்திய நாடுகளில் மிஸ்வாக் குச்சிகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகள், இங்கிலாந்தில் ஒரு குச்சி 4 பவுண்டுகள் வரையிலும், இந்தியாவில் பத்துப் பனிரெண்டு குச்சிகளை நானூறு ரூபாய் வரையிலும் விற்பனை செய்கின்றனர். மிஸ்வாக் குச்சியை விரும்பாதவர்களுக்கு, அதன் சுவையை டூத் பேஸ்ட்களில் புகுத்தி வியாபார நிறுவனங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன.
‘‘இயற்கையை சற்று உற்றுப் பாருங்கள்… அது இன்னும் பல ஆழமான புரிதல்களை ஏற்படுத்தும்” என்பது மிஸ்வாக்கிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வாய் சுகாதாரம் (oral hygiene) என்பது ஒட்டுமொத்த உடல் சுகாதாரத்தின் முன்னுரை என்பதைப் புரிந்து கொண்டு, காலை எழுந்தவுடன் ரசாயனங்கள் நிறைந்த பற்பசையால் ஆரோக்கியத்தைக் குறைத்துக்கொள்ளாமல், இயற்கை அளித்துள்ள இனிய, எளிய, அனைவருக்குமான மிஸ்வாக் அல்லது ஆல வேலங்குச்சி கொண்டு புன்னகையில் கொஞ்சம் புத்தொளியை சேர்ப்போம் வாருங்கள்..!
(இயற்கை பயணம் நீளும்..!)
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்: டாக்டர் சசித்ரா தாமோதரன்