மண்ணையும், நீரையும் பாதுகாத்து வந்தால்தான் வரும் தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்வைக் கையளிக்க முடியும். பெய்யும் மழைநீரில் பெருமளவு கடலில் கலந்தபோதும், ஒரு பகுதியையாவது சேகரித்து வைக்க நீர்நிலைகள் இருக்கின்றன. ஆனால் மண்ணின் நிலைமைதான் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ரசாயன உரங்களை மிகுதியாக கொட்டி விவசாயம் செய்வதன் மூலம் மண்ணில் இருந்த உயிர்த்தன்மை குறைந்து மெல்ல மெல்ல மலடாகி வருகிறது. ஆனால் பல விவசாயிகள் தொடர்ந்து ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகின்றனர். இயற்கை முறை விவசாயம் குறித்த அக்கறை இங்கு பல பேருக்கு கிடையாது.
மண்ணைப் பாதுகாக்கவும், வரும் தலைமுறைக்கு நஞ்சில்லா உணவுகளைக் கொடுக்கவும் நமது கையில் இருக்கும் ஒரே வழி இயற்கை முறையில் விவசாயம் செய்வதுதான். அந்தப்புரிதலோடு இப்போதைய புதிய தலைமுறையில் சிலர் இயற்கை விவசாய முறைக்கு திரும்பி வருகிறார்கள்.அந்த வரிசையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருப்பெயர் தக்கா என்கிற கிராமத்தைச் சேர்ந்த அருள் என்ற விவசாயி, கடந்த 13 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். திருப்பெயர் தக்கா கிராமத்தில் விளைவிக்கப்படும் பயிர்களில் நெல், எள், வேர்க்கடலைதான் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த மூன்று பயிர்களையும் ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்களுக்கு மத்தியில், அருள் மட்டும் இயற்கை முறையில் பயிர் செய்து, நல்ல லாபம் பார்த்து வருகிறார். அவரது விவசாய அனுபவங்கள் குறித்து அறிய ஒரு காலைப்பொழுதில் திருப்பெயர் தக்கா கிராமத்திற்கு சென்றோம். அடுத்த பட்டத்திற்கு நெல் நாற்று நடும் பணியில் தீவிரமாக இருந்த அருளைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று பேசத்தொடங்கினார்.
“தாத்தா, அப்பா என எங்கள் குடும்பமே இயற்கை முறை விவசாயத்தில்தான் ஈடுபட்டு வருகிறது. சிறுவயதில் இருந்தே உயிர்கள் மீதும், மண்ணின் மீதும் நேயமாக இருப்பேன். ஒவ்வொரு உயிருக்கும் நம்மைப்போலவே மண்ணில் வாழத் தகுதி உண்டு, அதனை எந்த முறையிலும் தீண்டவோ, கொல்லவோ கூடாது என நினைப்பவன் நான். அந்த எண்ணம்தான் விவசாயத்தின் மீதும் எனக்கு ஆர்வத்தை அதிகமடையச் செய்தது. அப்பாவோடு நானும் சிறுவயதில் வயலுக்கு சென்று விவசாயப் பணிகளில் ஈடுபடுவேன். அதனால் இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி எனக்கு சிறுவயதிலேயே நன்றாகத் தெரியும். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு வேறு வேலை பார்க்கலாம் என நினைத்து டெல்லி சென்றேன். அங்கு 8 ஆண்டுகள் வெவ்வேறு வேலைகள் பார்த்தாலும், மனம் விவசாயத்தின் பக்கமே இருந்தது. ஊருக்கு சென்று விவசாயம் செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் அடிக்கடி எட்டிப்பார்த்தது. அதனால் எட்டு ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வந்து விவசாயத்தைத் தொடங்கினேன்.
எங்கள் ஊரில் அனைவருமே ரசாயன முறையில்தான் விவசாயம் செய்துகொண்டு இருந்தார்கள். நான் இயற்கை முறை விவசாயத்தை செய்யலாமென நினைத்தால் 8 ஆண்டுகளாக விவசாயம் நடக்காத நிலத்தில் இயற்கை முறையில் எப்படி செய்வதென யோசித்தேன். பிறகு தீர்க்கமாக முடிவெடுத்து இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன். மண்ணைப் பக்குவப்படுத்த, தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை விரட்ட, மகசூல் எடுக்க என அனைத்துமே ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமா இருந்தது. இதனால் கடனும் ஏறியது. ஆனால் இப்போது எனது நிலம் இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாறிவிட்டது. 13 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். பூச்சித்தொல்லைகள் கூட இப்போது வருவது கிடையாது. ஆரம்பத்தில் 4 ஏக்கரில் செய்துவந்த விவசாயத்தை இப்போது 7 ஏக்கர் வரை விரிவு செய்திருக்கிறேன்.
நமது பாரம்பரிய நெல் ரகங்களை இங்கு முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கிறேன். சீரக சம்பா, கிச்சிலி சம்பா, கருங்குறுவை, பூங்கார், கருப்புக்கவுனி, தூய மல்லி, நாட்டு வெள்ளை பொன்னி என பல பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலும் எடுத்து வருகிறேன். உளுந்தூர்பேட்டையில் 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் விதைநெல் வாங்கினேன். அவர்களிடம் வாங்கிய விதைநெல்லைத்தான் ஆரம்பத்தில் எனது நிலத்தில் விதைத்தேன். அடுத்தடுத்த ஆண்டில் எனது வயலில் விளைந்த நெல்லையே மீண்டும் நாற்று விடுவதற்கு விதையாகப் பயன்படுத்திக் கொண்டேன். இப்போது தமிழகம் முழுவதும் 200 விவசாயிகளுக்கு மேல் விதைநெல் கொடுத்து உதவுகிறேன்.
பாரம்பரிய நெல் விவசாயம் செய்வதற்கு முதலில் நிலத்தை நன்றாக தயார்படுத்த வேண்டும். அதற்கு முதலில் தேர்ந்தெடுத்த நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். உழுது முடித்த பிறகு ஒரு ஏக்கருக்கு ஒன்பது யூனிட் தொழுவுரம் இட வேண்டும். தொழுவுரம் இட்ட பிறகு அந்த நிலத்தை மேலும், கீழுமாக தொழு உரம் அடியில் செல்லும்படி மீண்டும் உழ வேண்டும். அதன்பிறகு வேப்ப இலை, ஆவாரம், வாகை போன்ற பல வகையான பூச்சி விரட்டும் தழைகளையும் அதனோடு சேர்த்து நிலத்தில் உழுது தண்ணீர் விட வேண்டும். இந்த நிலத்தில் பதினைந்து நாட்களுக்குப் பிறகு நாற்று விடும் பணியைத் தொடங்கலாம். நாற்றுவிட்ட பிறகு முதல் இரண்டு நாட்கள் தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. அதற்கு அடுத்த நாளில் இருந்து வயலில் எப்போதும் ஒரு அங்குல அளவிற்கு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுத்தால் நிலத்தில் எப்போதும் ஈரப்பதமும், தண்ணீரும் இருக்கும். அப்படி தண்ணீர் கொடுக்காதபோது நிலத்தில் களை அதிகமாக முளைத்துவிடும். எங்களுக்கு ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய, 30 கிலோ விதை நெல் தேவைப்படுகிறது. வெவ்வேறு வகை பாரம்பரிய நெல் விதைப்பதால் அறுவடைக் காலமும் வெவ்வேறு பருவத்தில் இருக்கும். இதனால் அறுவடை வேலையை செய்வதற்கு சுலபமாக இருக்கிறது.
நெல் மட்டும் இல்லாமல் எள், வேர்க்கடலையும் பயிரிடுவதால் ஆண்டு முழுவதுமே எனது நிலத்தில் விவசாயம் நடந்தபடி இருக்கும். அதுபோக 20 மாடுகளும் வளர்த்து வருகிறேன். இதனால் இயற்கை விவசாயத்திற்கு தேவையான தொழுஉரமும் கிடைக்கிறது. நெல் அறுவடை முடிந்த நிலத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு எனது மாடுகள் அனைத்தையும் மேயவிட்டு அங்கேயே கட்டி கிடை அமைப்பேன். அவ்வாறு செய்வதால் மாடுகள் வெளியேற்றும் கோமியம், சாணம் ஆகியவை நிலத்திற்கு நல்ல சத்தான உரமாகி விடுகிறது. சத்து நிறைந்த இந்த நிலத்தில் எள் பயிரிடுவோம். நெல் பயிரிடப்படும் நிலத்தில் யாரும் எள் பயிரிட மாட்டார்கள். அப்படி பயிரிட்டால் மண்ணில் உள்ள அனைத்து வகையான சத்துக்களையும் எள் ஈர்த்து விடும். அதுவும் இயற்கை விவசாயம் செய்தால் அந்த நிலத்தில் எள் சுத்தமாக செய்ய மாட்டார்கள். ஆனால், நான் செய்து வந்தேன். மண்ணை அந்தளவிற்கு பழக்கப்படுத்தியதே அதற்கு காரணம். மண்ணில் எப்போதும் இயற்கையான உரங்களைக் கொடுத்தபடி இருப்பேன்.
எள் அறுவடை முடிந்த நிலத்தில் அடுத்தபடியாக வேர்க்கடலை பயிரிடுவேன். எள் அறுவடைக்கும், வேர்க்கடலை விதைப்புக்கும் இடைப்பட்ட காலங்களில் மீண்டும் எனது மாடுகளை அந்த நிலத்தில் மேயவிட்டு, கிடை அமைப்பேன். இதனால் மண் மீண்டும் சத்தான மண்ணாக மாறும். ஒரே நிலத்தில், ஒரே ஆண்டில் 3 பயிர் களையும் பயிரிட்டு லாபம் பார்க்கிறேன்.பாரம்பரிய நெல் சாகுபடி செய்யப்பட்ட வயலில் களை எடுப்பதற்கு எப்போதுமே, களைக்கொல்லி தெளிக்க மாட்டேன். எத்தனை ஏக்கர் வயலாக இருந்தாலும் ஆள் வைத்து கையால்தான் களை எடுக்கிறேன். ஆரம்பத்தில் பாரம்பரிய நெல் நடவு செய்யும்போது பூச்சித்தொல்லைகளும், மகசூல் குறைபாடுகளும் இருந்தது. அப்படி பூச்சித்தொல்லை இருக்கும்போது வேப்ப இலை கரைசல், வேப்பெண்ணெய் கரைசல், ஐந்திலை கரைசல், பத்திலை கரைசல் ஆகியவற்றைக் கொண்டே பூச்சிகளை விரட்டுவேன். எனது நிலத்தில் எப்போதுமே பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்த மாட்டேன். மூலிகை பூச்சி விரட்டிகள் மட்டும்தான் பயன்படுத்துவேன். இயற்கை விவசாயம் செய்யக்கூடிய நிலத்தில் எப்போதுமே நன்மை செய்யக்கூடிய பூச்சிகள் அதிகம் இருக்கும். இதனால் தீங்கு தரக்கூடிய பூச்சிகளை நன்மை தரும் பூச்சிகள் தின்றுவிடும்.
எனவே எனது நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அடி உரமாக தொழுஉரம் இடுவது, இரண்டு முறை களை எடுப்பது தவிர பெரிய அளவில் பராமரிப்பு கிடையாது. இதனால் செலவும் மிச்சமாகிறது. எனது நிலத்தில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ நெல் மகசூலாக கிடைக்கிறது. இதை நான் வியாபாரிகளுக்கு விற்பது இல்லை. நேரடி விற்பனை மட்டும்தான். பலர் எங்கள் வீடு தேடி வந்தே வாங்குகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் தொடர் வாடிக்கையாளர்களாக 50 பேர் இருக்கிறார்கள். அதிலும், சர்க்கரை நோயாளிகள், சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகள், மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் என பல தரப்பினர் எங்களிடம் வந்து தோல் நீக்கிய அரிசியாகவும், நெல்லாகவும் வாங்கிச் செல்கிறார்கள். இயற்கை முறையில் விளைந்ததால் எள் மற்றும் நிலக்கடலையையும் கடைகளுக்கு விற்காமல், எண்ணெயாகவும், விதையாகவும், எள்ளுருண்டையாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். இப்படி கொடுப்பதன் மூலம் இயற்கை விவசாயத்தின் சத்தும், நோக்கமும் சரியான
நபர்களுக்கு சென்றடைகிறது.
இந்த வகை விவசாயத்தில் மகசூல் குறைவு, லாபமும் குறைவு என்று சொல்வார்கள். மண்ணைப் பழக்குவதன் மூலம் எதையுமே சாதித்து விடலாமென்பதே உண்மை. மொத்தம் ஏழு ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். உழவு, கூலி, தழை வாங்குதல் இதற்கெல்லாம் சேர்த்து எனது கூலியைத் தவிர்த்து ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. நெல், அரிசி, எண்ணெய், எள் உருண்டை என விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானமாக கிடைக்கிறது. ரூ.3 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இந்த ஏழு ஏக்கரில் இந்த வருமானம் குறைவாக இருந்தாலும், எங்களுக்கு வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது’’ நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு: அருள் – 85269 94109