இயற்கையான சாயங்களில் உருவாக்கப்பட்ட புடவைகள், சல்வார்கள், வேஷ்டி, சட்டைகள், டி-ஷர்ட்கள் என பலவும் அறிந்திருப்போம். ஆனால் இயற்கையான சாயங்களில் உருவாகிய உள்ளாடைகள் நிச்சயம் புதிதுதான். ஒரு பள்ளிக்கூடமே நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை கிளாடிஸ் அலெக்ஸ், இப்போது முழு நேரமாக இந்த இயற்கையான டையிங் மற்றும் உள்ளாடைகள் உருவாக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வீதம் கர்ப்பப்பை புற்றுநோயால் இறக்கிறார் என உலக அளவில் ஆராய்ச்சித் தரவுகள் கூறுகின்றன. உலக அளவில் புற்று நோய் காரணமாக மரணம் 100% எனக் கொண்டால் அதில் கருப்பைப் புற்றுநோயால் உண்டாகும் பாதிப்பும், மரணங்களும்தான் 6%-29% என்கிறார்கள். இதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தேன்.
அப்படி தோன்றியவைகள்தான் இந்த இயற்கையான சாயத்தால் வண்ணங்கள் பூசப்பட்ட உள்ளாடைகள்’. தனது நோக்கம் என்ன என்னும் வார்த்தைகளாக பேசத் தொடங்கினார் கிளாடிஸ் அலெக்ஸ்.‘எனக்குச் சொந்த ஊர் திருப்பூர், பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, திருமணம் அனைத்தும் திருப்பூர். சிறுவயது முதலே தறி சப்தத்தில்தான் வளர்ந்தேன். என் அப்பாவுக்கும் ஜவுளி வியாபாரம், தறி, சாயம் இப்படித்தான் வேலை. பூர்வீக பரம்பரைத் தொழிலும் நெசவுதான். மேலும் என்னுடைய கணவர் அலெக்ஸ், ஆசிரியர் பணியில் இருந்தவர் ஆனால் அவருடைய பரம்பரைத் தொழிலும் நெசவும், ஜவுளி சார்ந்த வியாபாரமும் என்கிறதால் என்னுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கிட்டார். நான் எம்.ஏ, பி.எட் படித்திருக்கேன். சொந்தமாக ஒரு மான்டேசொரி பள்ளியும் வைத்திருந்தேன். இடையில் கொரோனா, ஊரடங்கு வேளைதான் என்னால் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியவில்லை. மேலும் குழந்தை பிறந்த காரணம் அதற்கே நேரம் சரியாக இருந்தது. அத்தனையும் துவங்கியது என் குழந்தை வந்தபிறகுதான். கொரோனா வேளையிலே நாமெல்லாம் இயற்கையான நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, சிறுதானியம், கஷாயம் என பலரும் மாறிக்கொண்டிருந்தோம். அந்த வேளை என் குழந்தையின் துணிகள் அனைத்தையும் செயற்கை சாயமில்லாத இயற்கையான சாயங்களால் குறிப்பாக மூலிகைகளால் உருவாக்கிய சாயங்கள் கொண்டு நிறமேற்றி பயன்படுத்த நினைத்தேன்.
என் குழந்தை பெயர் பேம்பி. பேம்பிக்கான இயற்கைச் சாயத் தேடல்தான் இன்று என்னை தொழில் செய்யும் அளவிற்கு யோசிக்க வைத்து சம்பாதிக்க வைத்தது’. தனது இயற்கைச் சாயங்களை உருவாக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறார், உள்ளாடைகள் குறித்த ஆலோசனை எப்படி வந்தது? தொடர்ந்தார் கிளாடிஸ். ‘மாதுளைத் தோல், கடுக்காய், மஞ்சள், மஞ்சி ஸ்டம், வேம்பு, வெட்டிவேர், மரப்பட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வெள்ளைப் பருத்தித் துணியிலே வீட்டு சமையலறையில் என் குழந்தைக்காக சாயமெடுக்கத் துவங்கினேன். ஆரம்பத்தில் சாயமும், சாயம் தாயாரிப்பும்தான் என்னுடைய பிரதான ஆய்வாக இருந்தது. மேலும் எந்தத் துணியில் எப்படிப்பட்ட நிறம் கொடுக்கிறது, உதாரணத்திற்கு இலைகளில் இருந்து எடுக்கும் பச்சை நிற பட்டுத் துணியில் பளபள நிறத்தில் கிளிப்பச்சையான நிறம் கொடுக்கும். ஒவ்வொரு துணிக்குமே சாயம் பிடித்தமும், நிறமும் கூட மாற்றம் ஏற்பட்டது. மேலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் பாலிஸ்டர், சின்தடிக் உள்ளிட்ட துணிகளில் இயற்கைச் சாயம் ஒட்டாது. பருத்தித் துணி, பட்டுத் துணி, வேம்பு, வாழைநார் துணி உள்ளிட்ட தாவரம் மற்றும் இயற்கையான முறைகளில் உருவாக்கப்பட்ட துணிகளில் மட்டுமே இந்தச் சாயம் ஒட்டும். மேலும் இந்தச் சாயக் கழிவை செடிகளில் ஊற்றியபோது செடிகளின் வளர்ச்சியில் அதீத முன்னேற்றம் காண முடிந்தது. ஏதோ ஆக்கப்பூர்வமான செயலைத் துவங்கியிருக்கிறோம் என்னும் நம்பிக்கையும், நிறைவும் உண்டானது’.
பொதுவாகவே இயற்கையான சாயங்களும், டைகளும் உருவாக்கிய கிளாடிஸிடம் இந்த சாயம் பல வருடங்கள் நிற்குமா, சாயம் போகுமா? என்னும் கேள்விகள் வாடிக்கையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் எழத் துவங்கியதன் விளைவே ஒரு சான்றுக்காக உள்ளாடைகள் உற்பத்தியை ஆரம்பித்திருக்கிறார் கிளாடிஸ். ‘நிறைய ஜவுளிக் கடைகள், பெட்டிக் கடைகள் என என்னிடம் சாயம் வாங்குவார்கள். இயற்கைச் சாயங்கள், டைகள் என்பதுதான் என்னுடைய தொழிலின் நோக்கம். பலருக்கும் இயற்கையான டைகள், சாயங்களில் தேய்த்த உடைகள், துணிகள் பிடித்திருந்தாலும், நிறைய கேள்விகள் எழுந்தது. எவ்வளவு நாள் சாயம் நிற்கும், துவைத்தால் மற்ற துணிகளில் இந்தச் சாயம் இறங்குமா? இப்படி நிறைய கேள்விகள். அதற்கெல்லாம் ஒரு சான்று தேவைப்படவே உள்ளாடைகள் உற்பத்தி ஆரம்பித்தேன். அதிலும் ஊரடங்கு வேளைதான் இந்த கருப்பை அலர்ஜிகள், புற்றுநோய்கள், மரங்கள் குறித்த கட்டுரைகள் நிறைய படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சரி ஏதோ ஒரு தயாரிப்பு என ஆரம்பிக்காமல், பயனுள்ளதாக பெண்கள் அணியும் பேன்டிகள் எனத் துவங்கினேன். மேலும் பாடி, கட் பாடி என யோசித்தால் அதில் அளவுகள், பேட், வயர்கள் என பல பிரச்னைகள் வரும். ஆனால் அதைக் காட்டிலும் முக்கியம் கருப்பை ஆரோக்கியம் என்பதை மனதில் கொண்டு பேன்டிகள் என முடிவு செய்தேன். அதிலும் அடிவயிறு குளிர்ந்தாலே பல உடல் பிரச்னைகள் சரியாகும் என்பார்கள்.
அதை நோக்கிய பயணமாக வெட்டிவேர், வேம்பு என இந்த சாயங்கள் ஏற்றிய உள்ளாடைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தேன். சாதாரண பேன் டிகள், பிகினி லைன் பேன் டிகள், குழந்தைப் பேறுக்குப் பின் வயிற்றை அழுத்தி சீராக்கும் பட்டை பேன்டிகள், பெண் குழந்தைகள் பள்ளிச் சீருடைகளுக்குள் அல்லது கவுன்களுக்குள் அணியும் டிரவுஸர்கள் என உருவாக்கினேன். மூன்று உள்ளாடைகள் முறையே ரூ.500 என கடைகளில் விற்கும் எப்போதுமான உள்ளாடைகளின் விலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்தேன். நிறைய பெண்கள் விரும்பி வாங்குகிறார்கள். மேலும் சாயங்கள் பட்டுச்சேலைகள் உற்பத்தியாளர்கள், குழந்தைகளுக்கான அடிப்படை துணிகள் தயாரிப்போர் நிறைய பேர் இந்த சாயங்களை என்னிடம் கொள்முதல் செய்கின்றனர்.
‘என் அப்பாவிற்கு தோல் சார்ந்த பிரச்னைகள் உண்டு, ஒருவேளை கெமிக்கல் சாயப் பட்டறையில் வேலை செய்த காரணமாக இருக்குமோ என்னும் சந்தேகம் எங்களுக்கு உண்டு. அதுவும் கூட ஒரு உந்து சக்தியாகச் சொல்லலாம். சாய உற்பத்தியில் அப்பாவின் பங்கும் அதிகம். நிறைய சந்தேகங்கள், பதில்கள், முறைகள் என நிறைய சொல்லிக் கொடுத்து வருகிறார். என் மகள் ஓவியம் வரைந்தால் கூட என்னைப் போலவே இலைகள், மஞ்சள் எனத் தேடி அதற்கு வண்ணப்பூச்சுக் கொடுப்பதைப் பார்க்கும் போது இன்னும் மகிழ்வாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையிலே நாம் செய்யும் தொழிலால் இந்த மண்ணும், மனமும் குளிர வேண்டும், அதை நோக்கிய பயணமே இந்த இயற்கைச் சாயங்கள் தயாரிப்பு’ மனநிறைவுடன் சொல்கிறார் கிளாடிஸ்.
– ஷாலினி நியூட்டன்