ஸ்ரீபெரும்புதூர்: இயற்கை எரிவாயு குழாயில் சேதப்படுத்தினால் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஏஜி அண்டு பி பிரதம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஜி அண்டு பி பிரதம் நிறுவனம் மூலம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக இயற்கை எரிவாயு குழாய் மூலம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பண்ருட்டி கிராமத்தில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு அப்பகுதி வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 13ம் தேதி கிராம பஞ்சாயத்து மூலம் கால்வாய் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டபட்டுள்ளது. அப்போது, அங்கு பதிக்கப்பட்டு இருந்த இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 32 மி.மீ. விட்டம் கொண்ட இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்து, எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்நிறுவனத்தின் ஊழியர்கள், சேதமடைந்த எரிவாயு குழாயினை அரை மணி நேரத்தில் சரிசெய்து, அப்பகுதிக்கான எரிவாயு விநியோகத்தை சீர்செய்தனர்.
மேலும், ஆன்லைனில் வந்த புகார் குறித்து அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு சட்டத்தின்படி ஐபிசி பிரிவு 285 மற்றும் 336ன் கீழ் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அரசு சட்டத்தின்படி மூன்றாம் தரப்பினர் பள்ளம் தோண்டும் பணிகளை தொடங்க திட்டமிட்டால், அவர்கள் நகராட்சி அல்லது நகர எரிவாயு வினியோக நிறுவனத்திற்கு ஏஜிமற்றும்பி பிரதம் நிறுவனத்தின் கட்டணமில்லா எண்: +91 80568 47333 / 1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும்.
சட்டத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இதுபோன்ற அலட்சியங்களை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், மூன்றாம் தரப்பினரால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.