சென்னை : சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்திற்கு அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களைப் பதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 27 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சியிடம் அனுமதிக் கோரப்பட்டது.
இந்த நிலையில் 8 இடங்களில் மட்டுமே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் அந்த 8 இடங்களில் பணியை மேற்கொள்ள டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 8 இடங்கள் என்னென்ன ?
அம்பத்தூர் மண்டலம்:
1.வடக்கு அவென்யூ 26 வது தெரு.
2.கண்ணாத்தாள் சாலை
3.ஆபிஸ் காலனி டி.வி.எஸ் அவென்யூ.
அண்ணாநகர் மண்டலம்:
1.பிளாக் 40 வது தெரு.
2.ஸ்பர் டேங்க் சாலை
தேனாம்பேட்டை மண்டலம்:
1.டாக்டர் பெசன்ட் சாலை
கோடம்பாக்கம் மண்டலம்
1.ஜெய் நகர்
2.நடேசன் நகர் மேற்கு