இயற்கை விவசாயம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பாலப்பட்டியை சேர்ந்த விவசாயி கே.கே.வேலுச்சாமி. எல்லோரும் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் என இயற்கை இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்வார்கள். இவர் முற்றிலும் தழைச்சத்துள்ள பயிர்களை விளைவித்து, அதை மடக்கி உழுது நிலத்தை வளமாக்கி விவசாயம் செய்கிறார். ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்துப் பேசினோம். “பி.டெக்., லெதர் டெக்னாலஜி முடித்துவிட்டு, ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றினேன். எனது தந்தையின் உடல்நிலை பாதித்த நிலையில், அவருக்குத் துணையாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டேன். தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பத்துடனே இருக்க என ஆசைப்பட்டேன். இதனால் முழுநேர விவசாயியாக மாறி இருக்கிறேன். நாம் செய்வது உண்மையான இயற்கை விவசாயமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். இப்போது பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றால் செய்வதுதான் இயற்கை விவசாயம் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நமது முன்னோர்கள் கையாண்ட இயற்கை விவசாயமுறை இதுவல்ல. இந்தப் பொருட்கள் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு கிடைப்பதும் மிகவும் அரிது. அதற்குப் பதிலாக சிறுதானியங்களை அரைத்து, அதனை உரமாக பயன்படுத்திப் பயிரிடுவது நல்லது.
தற்போது எனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் தென்னை, பீர்க்கன், அவரை, பாகல், சுரைக்காய், பூந்தி அவரை, புடலை, சித்து பூசணி போன்றவறை பயிரிட்டு இருக்கிறேன். இதில் கொடிக்காய்களை மட்டும் 5 ஏக்கரில் சாகுபடி செய்திருக்கிறேன். பொதுவாக சீசனைப் பொருத்துதான் காய்களைப் பயிரிடுவது எனது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே நல்ல லாபம் கிடைக்கும். பீர்க்கன், புடலை, சுரைக்காய், பாகல் போன்றவற்றை தலா ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருக்கிறேன். முதலில் நிலத்தை சமன்படுத்தி, சோளம், தட்டைப்பயறு, நரிப் பயறு என பயறு வகைகளைக் கலந்து நிலம் முழுவதும் வீசுவேன். அவை குறிப்பிட்ட காலஅளவில் வளர்ந்து செடியானவுடன் பவர் டில்லர் கொண்டு உழுது அதையே உரமாக்கி காய்கறி களைப் பயிரிடுவேன். பீர்க்கன்காயைப் பயிரிட ஒரு ஏக்கர் நிலத்திற்கு அரை கிலோ வரை விதை தேவைப்படும். நான்கு முறை உழவு ஓட்டிய பிறகு விதைகளை ஊன்றுவேன். ஏற்கனவே கிடைத்த மகசூலில் இருந்து எடுத்து வைத்த என்னுடைய சொந்த விதைகளைத்தான் பயன்படுத்தி இருக்கிறேன். விதையை ஊன்றுவதற்கு முன்பே பந்தலை தயார்செய்து வைத்துக்கொள்ள வேண்டும். விதை ஊன்றிய 4வது நாளில், விதைகளில் இருந்து முளைப்பு வரத் தொடங்கிவிடும். தயார் செய்து வைத்துள்ள நிலத்தின் மீது 3 அடிக்கு இடைவெளிவிட்டு மேட்டுப்பாத்தி அமைத்து, அதில் விதை ஊன்றுவோம். பிறகு 3 அடிக்கு ஒன்று என ஓட்டை போட்டு, அதில் கால் அடிக்கும் குறைவாக குழியிட்டு, இரண்டு, மூன்று விதைகளை ஊன்றுவோம். இந்த தருணத்தில் ஒரு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விடுவோம். விதை ஊன்றிய 3 லிருந்து 4வது நாளில் விதையில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிவிடும். கொடிகள் 10வது நாளில் நன்கு வளர்ந்து வந்துவிடும். இந்த நேரத்தில் கொடிகளை பந்தலில் கட்டி விடுவோம். 20லிருந்து 28 நாட்களில் கொடிகளில் இருந்து பூக்கள் வரத்தொடங்கிவிடும். 40வது நாளில் காய்கள் வரத்தொடங்கிவிடும். ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் காய்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோ ரூ.30 லிருந்து ரூ.35 வரை விற்பனை செய்கிறேன். சராசரியாக ரூ.64 ஆயிரம் கிடைக்கிறது. இதில் வண்டி வாடகை, பராமரிப்புச் செலவுகள் ரூ.5 ஆயிரம் போக ரூ.59 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இயற்கையில் கிடைக்கக் கூடிய இலை, தழை, பயறுகளை அரைத்து போடுவதால் உரச்செலவு இல்லை.
ஒரு ஏக்கரில் புடலையைப் பயிரிட 700 கிராம் வரை விதை தேவைப்படுகிறது. விதை ஊன்றிய 8வது நாளில் விதையில் இருந்து முளைப்பு வந்துவிடும்.
15 லிருந்து 20வது நாளில் கொடி வந்தவுடன் அதனை பந்தலில் கட்டிவிடுவேன். மழைக்காலத்தை தவிர மற்ற நேரங்களில் ஒரு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விடுவது அவசியம். மழைக்காலங்களில் 4 நாட்களுக்கு ஒருமுறை வீதம் தண்ணீர் விட்டால் போதுமானது. பொதுவாக கொடிகள் வாடாமல் இருக்கும் அளவிற்கு தண்ணீர் விட்டால் போதுமானது. கொடிகளைக் கட்டிய 30வது நாளில் பூக்கள் வரத் தொடங்கிவிடும். இதிலிருந்து 20வது நாளில் காய்கள் வந்துவிடும். ஒரு ஏக்கருக்கு 1 டன்னிலிருந்து 1.5 டன் வரை காய்கள் கிடைக்கும். சராசரியாக 14 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ புடலையை ரூ.15 லிருந்து ரூ.30 வரை விற்பனை செய்கிறேன். இதனை சராசரியாக ரூ.25க்கு விற்பனை செய்தால் ரூ.35 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் வண்டி செலவு ஆயிரம் ரூபாய் போக ரூ.34 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. 5 ஏக்கர் பந்தலில் 4 ஏக்கர் பந்தல் அரசு மானியத்திலும், மீதி ஒரு ஏக்கர் என்னுடைய சொந்தப் பணத்திலும் போட்டதால் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு இல்லை. பத்தடிக்கு ஒரு கல் ஊன்றி பந்தல் அமைத்து இருக்கிறேன். அதிக மகசூல் கிடைக்கும் நேரத்தில் இடையிடையே பந்தல் தொங்கிவிடாமல் இருக்க மூங்கில் குச்சிகளை வைத்து முட்டுக் கொடுப்பேன்.
ஒரு ஏக்கர் நிலத்தில் பாகற்காய் பயிரிட்டு இருக்கிறேன். விதைப்பதற்கு 400 கிராம் வரை விதை தேவைப்படும். 7 லிருந்து 8வது நாளில் முளைப்பு வரத்தொடங்கிவிடும். இதிலிருந்து 10வது நாளில் கீழே கொடிகள் படரத் தொடங்கிவிடும். இதனை பந்தலில் கட்டி வைத்து விடுவேன். விதை ஊன்றிய 55 லிருந்து 60வது நாளில் பாகற்காயைப் பறிக்கத் தொடங்கிவிடுவோம். ஒரு ஏக்கருக்கு 1.5 டன்னிலிருந்து 2.3 டன் வரை காய்கள் கிடைக்கும். இதனை கிலோ ரூ.30 லிருந்து ரூ.35 வரை சந்தையில் விற்பனை செய்கிறேன். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 1.8 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதனை சராசரியாக கிலோ ரூ.33 என்ற கணக்கில் சந்தையில் விற்கிறேன். இதன்மூலம் ரூ. 59 ஆயிரத்து 400 வருமானமாக கிடைக்கிறது. இதில் வண்டி செலவு ரூ.1000 போக ரூ. 58 ஆயிரத்து 400 லாபமாக கிடைக்கிறது. சுரைக்காயினை 1 ஏக்கரில் நடவு செய்துள்ளேன். இதற்கு 450 கிராம் விதை தேவைப்படும். நடவுக்கு தயார் செய்துள்ள குழிகளில், குழிக்கு 2 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். 4 அடிக்கு இரண்டு விதை வீதம் ஊன்றுவேன். விதை ஊன்றிய 8 லிருந்து 9வது நாளில் முளைப்பு வரத்தொடங்கிவிடும். விதைத்த 45வது நாளில் இருந்து காய் வரத் துவங்கிவிடும். காய்கள் வரத் துவங்கியது முதல் 50 நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு மொத்தமாக 6 டன் வரை மகசூல் கிடைக்கும். சுரைக்காயைப் பொறுத்தவரை பொதுவாக குளிர்காலத்தில் அதிகளவில் விற்பனையாகும்.
தற்போது, மார்க்கெட்டில் கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இதற்கு பெரிய அளவில் செலவு இல்லை என்பதால் காய்கள் அதிகம் கிடைத்தால் நல்ல லாபம் பார்க்கலாம். தற்போதைய விலை அடிப்படையில் சராசரியாக கிலோவுக்கு ரூ.10 கிடைக்கிறது. 6 டன் காய்கள் மூலம் ரூ.60 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுபோக ரூ.45 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.இதுபோக தென்னையில் இருந்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. 4 ஏக்கரில் உள்ள தென்னை மூலம் ரூ.2 லட்சம் கிடைக்கிறது. இதுதவிர பூசணியும் பயிரிட்டு இருக்கிறேன். பூசணியை ஒரு கிலோ ரூ.15 க்கு விற்பனை செய்கிறோம். ஒரு ஏக்கரில் 550 முதல் 600 காய்கள் கிடைக்கும். ஒரு காய் 3 கிலோ வரை இருக்கும். இதனை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.27 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. கார்த்திகை மார்கழி, தையில் மகசூல் தரக்கூடிய பூந்தி அவரையும் பயிரிட்டு இருக்கிறேன். இது வருடகாலப்பயிர் என்பதால் இதன்மூலம் வருடத்திற்கு ரூ.20 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.நான் சாகுபடி செய்யும் காய்கறிகள் தரமானதாக மட்டுமன்றி சுவையாகவும் இருக்கிறது என்பதை உழவர் சந்தைக்கு வரும் மக்கள் கூறுகிறார்கள். மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி, அதன்மூலம் செய்யப்படுவதே உண்மையான இயற்கை விவசாயம். நான் பின்பற்றும் இந்த முறையானது நுண்ணுயிர்ப் பெருக்கத்தை அதிகரித்து மணிச்சத்து, தழைச்சத்து என்று அனைத்திற்கும் வழிவகுக்கிறது’ என்கிறார் வேலுச்சாமி.
தொடர்புக்கு: வேலுச்சாமி
99408-88050