நன்றி குங்குமம் தோழி
“பீரியட்ஸ் பிராப்ளமா..?
பப்பாளி சாப்பிடுங்கள்..!
டெங்கு காய்ச்சலா..? தட்டணுக்கள் குறைகிறதா?
பப்பாளி இலைகளை சாப்பிடுங்கள்..!
மலேரியா நோயா..?
பப்பாளி விதைகளை சாப்பிடுங்கள்..!
ஹார்மோன்கள் பிரச்னையா?
பப்பாளி பழங்கள் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்..!
திட்டமிடப்படாத கர்ப்பமா..?
கரு கலைய பப்பாளியை சாப்பிடுங்கள்..!
கர்ப்பம் தரித்திருந்தால் அந்தப் பப்பாளி மட்டும் வேண்டவே வேண்டாம்..!”
இது போன்ற பல பப்பாளி சார்ந்த பரிந்துரைகள் நம்மிடையே நிறைந்திருப்பதை நன்கறிவோம். உண்மையில், கருத்தரித்த பெண்கள் பப்பாளியை உட்கொண்டால், கருச்சிதைவு நேரிடும் என்று சொல்லப்படுகின்ற பப்பாளி, எத்தனை தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நம்மையும் கர்ப்பிணி கதாநாயகிகளையும் கதிகலங்க வைத்திருக்கிறது. 80களில் சினிமாக்களில், ‘கொடுமைக்கார மாமியார்+பப்பாளி’ என்பது டெட்லி காம்பினேஷன் ஆயிற்றே! அப்படி என்னதான் உள்ளது பப்பாளியில்..? அம்மா..! ‘‘அப்பா நல்லவரா, கெட்டவரா..?” என்பதைப் போல,
உண்மையிலேயே பப்பாளி நல்லதா, கெட்டதா? இன்றைய இயற்கை 360°யில் பப்பாளி குறித்துப் பேசுவோம்..!Papaya எனும் பப்பாளியின் தாவரப் பெயர் Carica papaya. இது தோன்றிய இடம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா. Papaye என்றால் பிரெஞ்சு மொழியில் பழம் என்று பொருளாம். திரைக்கடல் ஓடிய ஸ்பானிஷ், டச் மற்றும் போர்ச்சுகீசிய வணிகர்கள், மெக்சிகோவின் பப்பாளியை கரீபியன் தீவுகளுக்கும், இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் 17ம் நூற்றாண்டில் கொண்டுசேர்க்க, இன்று மெக்சிகன், ஹவாயன் மற்றும் இந்தியன் வகைகளாக பப்பாளி உலகெங்கும் அதிகமாக விளையும் தாவரமாக உருவெடுத்துள்ளது.
இந்திய வகைகளில் சோலோ, கல்யாண்பூர், கோ1 ஆகியன அதிக விளைச்சல் தரும் சுவையான பழங்களாக கண்டறியப்பட்டுள்ளன. சுமார் முக்கால் அல்லது ஒரு கிலோ எடையுள்ள பப்பாளியின் வெளித்தோல் மஞ்சள் அல்லது பச்சை நிறத்திலும், உள்பகுதி அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலும், நடுப்பகுதியில் மிளகு போன்ற கருமை நிற விதைகளும் காணப்படும். லப்பயா, பாப்பா, பப்பாயி, மர தர்பூசணி என்றெல்லாம் அழைக்கப்படும் பப்பாளியை அதன் கரீபியப் பெயரான ‘அபாபி’ (ababi) என்பதைக் கொண்டு, ‘தேவதைகளின் கனி’ என்று மொழி பெயர்த்துள்ளார் கிறிஸ்டோபர் கொலம்பஸ்.
ஆனால், இது தேவதைகளின் கனி மட்டுமல்ல, ஊரெங்கும் உலகெங்கும் எளிதாகக் கிடைக்கும் பழம். வருடம் முழுவதும் மலிவாகக் கிடைக்கும் பழம். அத்துடன் நிறம்… மணம்… குணம் நிறைந்த பழம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதால் பப்பாளி உண்மையில் நம் பங்காளி என்றும், நம் அனைவருக்குமான ‘தேவதைக் கனி’ என்றும் குறிப்பிடுகிறார்கள் உணவு ஊட்டச்சத்து வல்லுநர்கள்..!
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பப்பாளிப் பழங்களில் என்றால்? உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பற்பல சத்துகள் அடங்கியுள்ளன என்று பப்பாளியின் பலன்களை பல்வேறு விதங்களில் அடுக்குகிறார்கள் அறிவியலாளர்கள். பப்பாளிப் பழம் பொதுவாக, 88% நீர்த்தன்மையும் குறைந்தளவு கார்போஹைட்ரேட்கள் (11%) மற்றும் குறைந்த கலோரிகளையும் (43 kcal/100g) கொண்டது. அதுமட்டுமின்றி அதிகளவு நார்ச்சத்து, கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் இ பப்பாளியில் அதிகம் உள்ளது.
நீரில் கரையும் பி வகை வைட்டமின்கள், குறிப்பாக ஃபோலிக் அமிலம், தையமின் மற்றும் பி 5 வைட்டமின், இதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளன. இவையனைத்திற்கும் மேலாக, இதயத்திற்கான லைகோபீன் எனும் ஆன்டி ஆக்சிடென்ட் இதில் அதிகம் காணப்படுகிறது.
பப்பாளியில் இருக்கும் அதிகளவிலான நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்கிறது. குறைந்த கலோரிகள் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் ஆகியவற்றில் பயனளிக்கிறது. பப்பாளியின் லைக்கோபீன் எனும் Phytonutrient இதய நோய் புற்றுநோய்கள், வயிற்று அழற்சி, மூட்டு வலி, கண் நோய் என பலவற்றிலும் பலனளிக்கிறது. இதில் காணப்படும் வைட்டமின்கள் சி மற்றும் ஏ, சரும நோய்கள், கண் நோய், மூட்டுவலி, கர்ப்பப்பை அழற்சி, பற்சிதைவு, காய்ச்சல், சளி ஆகியவற்றில் பயனளிக்கிறது.
பப்பாளியின் Papain மற்றும் Chymopapain நொதி செரிமானத்திற்கு உதவுகின்றது. பப்பாளியில் உள்ள ஆல்ஃபா லைப்போயிக் அமிலம், சரும அழகைக் கூட்டவும், முகப்பரு, கரும்புள்ளிகள், தீக்காயம் போன்றவை மறையவும் மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது.இப்படி அனைத்து சத்துகளும் நிறைந்த பப்பாளிப்பழம், கர்ப்ப காலத்தில் தாய்-சேய் இருவருக்குமே பல நன்மைகளை ஒன்றாகத் தருகிறது. அதன் முக்கிய ஊட்டங்களால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குவதுடன், தாயின் ரத்த அபிவிருத்திக்கு உதவி செய்து, ரத்த சோகையைப் போக்குகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடற்பருமனைத் தவிர்த்து, செரிமானமின்மை, மலச்சிக்கல், வயிற்று அழற்சி, தசைகள் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு அதிகம் பயனளிக்கிறது. கர்ப்பத்தைப் பொறுத்தவரை, உண்மையில் ‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’ என்பதே பப்பாளிக்கு நன்கு பொருந்தும்.
கர்ப்ப காலத்தில் இதனை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும் என்ற பழியை ஏன் இந்தப் பப்பாளி சுமக்கிறது என்றால்? அது கனியல்ல காய் என்று கூறும் அறிவியல், பப்பாளிக் காய்களிலும் அதன் காம்புகளிலும் வெளிப்படும் latex எனும் பாலில் உள்ள பப்பாயின் (pappain) மற்றும் கைமோ பப்பாயின் (chymopappain) நொதிகளை அதிகம் உட்கொள்ளும் சமயத்தில் கருப்பை சுருங்கி விரிதலை ஏற்படுத்தக்கூடும்.
இதையேதான் சித்த மருத்துவமும் ‘கருவுற்ற ஆறு மாதங்களில் இருந்து பப்பாளியை உட்கொள்ளலாம்’ என சுட்டிக்காட்டுகிறது. ஆக, பப்பாளி காய்க்குத்தான் இந்தப் பழி பொருந்துமே தவிர, கனிகளுக்கு அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் பப்பாளி காய்களை நன்கு சமைத்த பின்னர் உட்கொண்டால் இந்த கருப்பை சுருங்கி விரிதலும் ஏற்படுவதில்லை என்பதால் சமைத்த காய்களையோ, கனிந்த பழங்களையோ கர்ப்ப காலத்தில் தாராளமாக உட்கொள்ளலாம் என்பதே உண்மை.
இப்படி, கர்ப்ப காலத்தில் மட்டுமன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதினருக்கும் பல்வேறு நன்மைகளைத் தரும் பப்பாளியை ‘கனிகளின் தேவதை’ என்றும் ‘பங்காளி’ என்றும் அழைப்பது பொருத்தமே. எல்லாம் சரி! பப்பாளி காய்-கனி மட்டுமன்றி, அதன் விதை, வேர், இலை, பால் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்று கூறப்படுகிறதே..? அது உண்மையா என்ற கேள்வியும் எழுகிறதல்லவா..?உண்மையில் பப்பாளி இலைகள் தட்டணுக்கள் உற்பத்தியைக் கூட்டும், ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும், இதன் விதைகள் மலேரியா நோய், பித்த நோய்கள், செரிமான நோய்கள் மற்றும் குடற்புழுக்களுக்கு பயன்படும் என்பதற்கும், இதன் காய்கனி மற்றும் விதைகள் ஹார்மோன்கள் குறைபாட்டை சரிசெய்யும் என்பதற்கும், அதன் கனி கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதற்கும் எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை.
அதேசமயம் அதிகளவு பப்பாளி விதைகளை உட்கொள்ளும்போது, அது விந்தணு குறைபாட்டையும் (azoospermia), கல்லீரல் பாதிப்பையும் (cirrhosis), சிறுநீரகக் கற்களையும் (renal stones) ஏற்படுத்தக்கூடும் என்றும், பப்பாளியின் விதைகளில் உள்ள ஐஸோ-தையோ சயனேட் (isothiocyanates) செல்களின் டி.என்.ஏ.வை பாதித்து உறுப்புகளில் அழற்சியையும், புற்றுநோயையும்கூட ஏற்படுத்தலாம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பப்பாளி பாலின் நொதிகளால் ஆஸ்துமா மற்றும் அதீத அலர்ஜி (anaphylaxis) உண்டாகும் வாய்ப்புகளும், உணவுக்குழாயில் அழற்சி ஏற்படும் வாய்ப்புகளும், மேற்சொன்ன கருப்பை சுருங்குதல் உண்டாகும் வாய்ப்புகளும் அதிகம் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். அதிகளவில் கனிகளை உட்கொள்ளும்போது, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அழற்சி ஏற்படும் வாய்ப்புகளும் இதில் உள்ளது.
ஆகவே, இயற்கை அளித்துள்ள பப்பாளிப் பழத்தில் பொதிந்துள்ள பலன்கள் ஏராளம்தான் என்றாலும், கண்மூடித்தனமாக கூறப்படும் மற்ற பலன்களையெல்லாம் அப்படியே நம்பி, அவற்றின் விதைகள், இலைகள், பால் ஆகியவற்றை உட்கொண்டு பக்கவிளைவுகளை விலை கொடுத்து வாங்காமல் இருப்பதுதான் நல்லது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் நன்கு வளரும் பப்பாளி, பயிரிட்ட 9 முதல் 10 மாதங்களிலேயே காய்க்கத் துவங்கிவிடுகிறது. அத்துடன் குறைந்தது 10 வருடங்கள் தொடர்ந்து தனது விளைச்சலை வருடம் முழுவதும் தருகிறது. இதன் காரண மாகவே விவசாயிகள் அதிகம் விரும்பும் பயிராகவும் பப்பாளி இருக்கிறது.
1998ம் ஆண்டு, ஹவாய் நாட்டில் அதீத வைரஸ் தாக்குதலால் பப்பாளி விளைச்சல் பெருமளவு பாதிப்படைந்த நிலையில், transgenic papaya என மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தாவரத் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட முதல் தாவரம் என்ற பெருமையை பப்பாளி கொண்டுள்ளது. பப்பாளியை அதிகளவில், அதாவது, வருடத்தில் 5 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக விளைச்சல் செய்யும் இந்தியா, உலகளவில் முதலாவதாக (38%) இருப்பதுடன், அதன் உற்பத்தியை அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.
பப்பாளியின் பழத்தை அப்படியே உண்ணலாம். அல்லது சாலட், மில்க் ஷேக், ஸ்மூத்தி எனவும் பரிமாறலாம். பப்பாளியின் காய்களை மீன் மற்றும் காய்களுடன் சமைத்து உண்கின்றனர் தாய்லாந்தினர். இறைச்சியை மென்மையாக்க மெக்சிகோவினர் பப்பாளிக் காய்களைப் பயன்படுத்துகின்றனர். பதப்படுத்தப்பட்ட பப்பாளிப் பழம் ஐஸ்கிரீம், கேக் முதலான உணவுகளில் சேர்க்கப்படுவதுடன், சால்ஸா, ஜாம், ஜெல்லி, ஊறுகாய் என பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பப்பாளியின் பயன்பாடு மிகமிக அதிகம் எனலாம்.
உணவாக மட்டுமன்றி பப்பாளியின் பால், அதன் நொதிகள், தடுப்பூசி மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிறுவனங்களிலும், கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பட்டு நூல் மற்றும் கம்பளித் தயாரிப்பிலும் இந்த லேட்டக்ஸ் பால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சோப்பு, ஷாம்பூ போன்ற நமது அன்றாட அத்தியாவசிய பயன்பாடுகளிலும், சரும அழகிற்கான ஃபேஸ் பேக்காகவும் பப்பாளியின் பாகங்கள் பயனளிக்கின்றன.
உண்மையில் பலவகையான ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் பப்பாளி முதன்மையானது எனலாம். வீடுதோறும் எளிதாக வளரும் இந்த ஏழைகளின் கனியான பப்பாளி உண்மையில் உண்ணக்கூடாத கனியும் அல்ல… அதற்காக அளவுக்கு மிஞ்சி உண்ணக்கூடிய பழமும் அல்ல..! அளவாக அதனை ஏற்று அதிகப் பயன்களைப் பெறுவோம் வாருங்கள்..!!
(இயற்கைப் பயணம் நீளும்..!)
கனிகளின் தேவதை!
*பப்பாளி விளைச்சலில் இந்தியா உலக அளவில் முதலாவது (38%) இடத்திலும், 5 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக விளைச்சல் செய்கிற நாடு என்கிற
வரிசையிலும் இருக்கிறது.
*இந்தியா தனது நாட்டின் பப்பாளி உற்பத்தியை, அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.