பெரம்பலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா கடந்த 25-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முன்னதாக 18-ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கடந்த 30-ம் தேதி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 31-ம் தேதி அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், நேற்று ஜூன் 1-ம் தேதி அன்று மாவிளக்கு, பொங்கல் பூஜை நடந்தது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து, மேளதாளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாரியம்மன் கோயில் முன்பு தேரோட்டம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்த அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு தேங்காய், வாழைப்பழம், பூ போன்ற பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரின் முன்பு பெண்கள் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம் ஆடி விளையாடினர். தேரோட்டத்தில் நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், ஈச்சங்காடு, மருதடி, விஜயகோபாலபுரம், நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், இரூர், திருவளக்குறிச்சி, பாடாலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பாடாலூர் போலீசார், செட்டிகுளம் மின் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் நாளை (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீர் மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.