பெர்லின்: ஜெர்மனியில் நடந்து வரும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிப்போட்டிக்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்றது. ஐரோப்பிய யூனியன் கால்பந்து கழகம் (யூஇஎப்ஏ) சார்பில் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் – ஜெர்மனி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனியின் புளோரியன் விர்ட்ஸ் முதல் கோல் அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து போர்ச்சுக்கல் வீரர் பிரான்சிஸ்கோ பதில் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்படைந்த நிலையில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் முடியும் வரை ஜெர்மணியால் பதில் கோல் ஏதும் போட முடியவில்ைல. இதனால் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரங்கில் திரண்டிருந்த 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதனால் உற்சாக முழக்கமிட்டனர். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் 9ம் தேதி போர்ச்சுக்கல் இறுதிப் போட்டியில் மோதும். 2வது அரையிறுதியில் தோல்வியடையும் அணியுடன் 3ம் இடத்திற்காக ஜெர்மனி அணி மோதும்.