விழுப்புரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடி செலவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 2 மாதத்தில் மீண்டும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் திக் திக் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலைகளை முழுமையாக சீரமைக்கும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரத்தில் 16 கிராமங்கள், கடலூரில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தமாக 134 கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 2024ம் ஆண்டே 90 சதவீதம் முடிவடைந்து வாகன போக்குவரத்து நடக்கிறது. இருப்பினும் விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் சாலை பணிகள் அப்போது முழுமை அடையவில்லை. புதுச்சேரி மார்க்கமாக செல்லும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வந்தன.
சாலை போடப்பட்ட சில மாதங்களிலேயே பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் நிதியில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். இதில் குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் பள்ளம் தோண்டிவிட்டு மீண்டும் பேட்ஜ் ஒர்க் போல் சாலையை சீரமைத்தன. புதிதாக போடப்பட்டு பயன்பாட்டுக்கு வராத நிலையில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அப்போது டெல்லியிலிருந்து வந்த நகாய் நிறுவன குழுவினர் நேரில் ஆய்வு செய்து குறைகளை சுட்டி காட்டி சரிசெய்ய அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் சிமென்ட் கரைசல் மூலம் பூசி சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழுப்புரம் – நாகப்பட்டினம் புதிய நான்கு வழிச்சாலையை திறந்து வைத்தார். இந்த சாலையை திறந்து வைத்த 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரத்தில் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு சாலை உடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் விரிசல் ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது திறப்பு விழா கண்ட பிறகும் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கையையும் வாகன ஓட்டிகள் முன்வைத்துள்ளனர்.