புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். நேற்று முன்தினம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘தேசிய கல்வி கொள்கை கர்நாடகாவில் பாஜ ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இது பாஜ ஆட்சி செய்யும் வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படவில்லை. தேசிய கல்வி கொள்கை அடுத்தாண்டு ரத்து செய்யப்படும். அதற்கு பதில் தனி கல்வி கொள்கை வகுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது பற்றி டிவிட்டரில் பதிவிடுகையில், நமது கல்வி முறையில் மாற்றங்கள் தேவை. பல்வேறு கட்ட ஆலோசனைகள், அனைத்து மக்களின் விருப்பங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவு சீர்திருத்தங்களுக்கு எதிரானது. கல்வி என்பது வளர்ச்சியின் ஒளிவிளக்காக இருக்க வேண்டும், அரசியல் பகடைக்காயாக அதை பயன்படுத்துவது தவறு என்று தெரிவித்தார்.