திருப்பூர், நவ.9: திருப்பூர், கோவை மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவத்துறை மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து, 8வது தேசிய ஆயுர்வேத தினம் திருப்பூரில் கொண்டாடப்பட்டது. ‘எந்நாளும் ஆயுர்வேதம், எல்லோருக்கும் ஆயுர்வேதம் என்ற குறிக்கோளுடன் நடைபெற்ற இந்த ஆயுர்வேத தின கொண்டாட்டத்தில், ஆயுர்வேத மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர்கள், பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திவாறு பேரணி சென்றனர்.
தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் தனம் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். பின்னர், ஆயுர்வேத மருத்துவம் குறித்த விழிப்புணர்வு உரையாடல் நடைபெற்றது.
அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் கவிதா, மேகலை, இந்திரா, சிவதாஸ், துர்க்காதேவி, பாஸ்கர், பாலகிருஷ்ணன் ஆகியோர் வழிகாட்டுதலில், ஆயுர்வேத மருத்துவ மருந்தாளுநர்கள், பணியாளர்கள், பள்ளியின் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.