டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்துக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், 16.50 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரர் முகம்மது சலாவுதீன் 16.01 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றார். கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் லோஹித் அக்ஷா பத்ரிநாத் – லட்சுமி பிரபா அருண்குமார் இணை தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான வாள்வீச்சு போட்டியில் தனி நபர் பிரிவில் தமிழகத்தின் கே.பி.கிஷோநிதி 15-12 புள்ளிகள் கணக்கில் வென்று தங்கம் பெற்றார். பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் ஸ்போர்ட் கட்டுப்பாட்டு வாரிய அணி 54 தங்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 41, கர்நாடகா 33, அரியானா 29, மத்தியப்பிரதேசம் 25 தங்கங்களுடன் 2 முதல் 5வது இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாடு 22 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என, மொத்தம் 75 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.