சென்னை: தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா என விளக்கமளிக்க மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சி நிறுவன தலைவர் டி.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேசிய மலரான தாமரை பாஜவுக்கு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தேன். ஆனால் அந்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தாமரை சின்னத்தை ஒதுக்கியதை ரத்து செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்ஷ்மி நாராயணன் அமர்வில் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அதை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.வி.கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் இருப்பதாகவும் இது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவைப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேற்கண்ட வழக்கை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் சின்னம் ஒதுக்கீட்டில் என்ன விதிமீறல் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும், அவ்வாறு நிரூபிக்காவிட்டால் கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்ட வழக்காகவும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.