சென்னை: சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பதாக தெரியவில்லை. மாறாக, சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறது.
அந்த வகையில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்படுவதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரக்கூடும். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள்தான். பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை விதிகளுக்கு ஏற்ப குறைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.