தயான் சந்த் (Dhyan Chand) இந்திய ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் ஆவார். தயான் சந்த் 1905ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை சமேஷ்வர் சிங் தாய் சரதா சிங். இவரின் தந்தை பிரிட்டிஷ் இந்தியப் பாதுகாப்புப் படையில் இருந்தபோது ராணுவ ஹாக்கி அணியில் விளையாடினார். இவருக்கு மூல் சிங் மற்றும் ரூப் சிங் எனும் இரு சகோதரர்கள் இருந்தனர். தயான் சந்த் தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவரின் குடும்பம் பல நகரங்களில் குடிபெயர வேண்டியிருந்தது. இதனால் தயான் சந்த் ஆறு வருடப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டார். இவர்களின் குடும்பம் இறுதியாக ஜான்சியில், உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்தனர்.
தயான் சந்தின் இளம்வயதில் விளையாட்டின் மீது அதிக நாட்டம் இல்லை . ஆனால், குத்துச்சண்டையில் இவருக்கு ஆர்வம் இருந்தது. ஒரு முறை தயான் சந்த் தன் தந்தையுடன், ராணுவத்தில் உள்ள இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த ஹாக்கி போட்டியை பார்த்துக்கொண்டு இருந்தார். ஒரு அணி தோல்வியைத் தழுவிக்கொண்டு இருந்தது. அப்போது தயான் சந்த் தன் தந்தையிடம் ‘‘எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தோல்வியைச் சந்திக்கும் அணியை வெற்றி பெறச் செய்வேன்” என்றார். அவர் சொன்னதை ஏற்று அவருக்கு விளையாட அனுமதி வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் 4 கோல்கள் போட்டு அந்த அணியை வெற்றி பெறச்செய்தார் தயான் சந்த். அதுவே அவர் தன் 16 வயதில் சிறுவர் ராணுவ ரெஜிமென்ட்டில் சேரவும் உதவியது.
ராணுவ வீரர்கள் இரவில் ஓய்வு எடுக்கும்போது தயான் சந்த் நிலவு ஒளியில் ஹாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பார். இதனைக் கவனித்த தயான் சந்தின் முதல் கோச் பங்கஜ் குப்தா, ‘‘தயான் சிங் ஒரு நாள் நீயும் இந்த நிலவை போல ஹாக்கி உலகில் பிரகாசிப்பாய்” என்று வாழ்த்தியுள்ளார். அதிலிருந்துதான் தயான் சிங் என்ற பெயர் தயான் சந்த் ஆனதாகச் சொல்லப்படுகிறது. சந்த் என்றால் சந்திரன் என்று பொருள்.1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும், 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலும், 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் ஹாக்கியில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
தயான் சந்த் ஹாக்கியில் பந்தைக் கையாள்வதில் மேதை எனப் புகழப்பட்டார். 1933 ஆம் ஆண்டில் தயான் சந்த் தனது உள்ளூர் அணியான ஜான்சி ஹே ஹீரோஸ் அணித்தலைவராக பெய்டன் கோப்பைப் போட்டியில் வென்றதையே மிகச் சிறப்பான போட்டி என்று கூறியுள்ளார். இதனைப் பற்றி இவர் கூறுகையில், என்னிடம் யாராவது இதுவரை தாங்கள் விளையாடியதிலேயே மிகச் சிறப்பான போட்டி எது? எனக் கேட்டால் நான் சிறிதும் தயங்காமல் 1933ம் ஆண்டில் விளையாடிய பெய்டன் கோப்பைக்கான போட்டியில் கல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியதைத்தான் கூறுவேன். ஏனெனில் அன்றைய சமயத்தில் கல்கத்தா கஸ்டம்ஸ் அணி மிக பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்டது. அவர்களின் அணியில் சௌகத் அலி, அசாத் அலி, சீமன், மோசின் போன்ற வீரர்கள் இருந்தனர்.எங்கள் அணியில், எனது சகோதரன் ரூப்சிங் மற்றும் இசுமாயில் ஆகியோர் மும்பை ரயில்வே அணியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் இருந்தனர்.
இவர்களைத் தவிர எங்கள் அணியில் இருந்த மற்றவர்கள் புது முக வீரர்களாக இருந்தனர்.ஆனால், அவர்கள் செய் அல்லது செத்து மடி எனும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். இரு அணி வீரர்களும் இலக்குகளைப் பெறக் கடுமையாகப் போராடினோம். இறுதியில் பந்தை நான் இசுமாயிலுக்குக் கடத்தினேன். கல்கத்தா கஸ்டம்ஸ் அணியில் நிலவிய புரிதலின்மையினைப் பயன்படுத்தி இசுமாயில் அதனை கோலாக மாற்றினார். அந்த போட்டியில் அந்த ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டு நாங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றோம் எனக் கூறியுள்ளார்.இவர் 1948ல் நடைபெற்ற ஹாக்கி உலகத் தொடரோடு ஓய்வு பெற்றார். மொத்தம் 400 கோல் அடித்துள்ளார். ஹாக்கி வரலாற்றில் ஒருவர் அடித்த அதிகபட்ச இலக்குகள் இதுவாகும். 1956ஆம் ஆண்டில் இந்திய அரசின் குடிமை விருதுகளில் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷண் விருதினைப் பெற்றார்.
இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29ம் தேதிதான் தேசிய விளையாட்டு நாளாக இந்தியாவில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது இவரது நினைவாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத்ரத்னா விருது 2014 வரை விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சகம் (இந்தியா) விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தயான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இவர் 51 வயதில் ராணுவத்திலிருந்து மேஜராகப் பதவி வகித்து விலகினார். அதே ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவித்தது. தயான் சந்த் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 3ந்தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாகக் காலமானார். ஜான்சியில் அவர் விளையாடி மகிழ்ந்த மைதானத்திலேயே அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்திய அரசு அவரின் தபால் தலை வெளியிட்டு அவரை கெளரவப்படுத்தியது. டெல்லி ஹாக்கி மைதானத்திற்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டது.