புதுடெல்லி: தனியார் மருத்துவ கல்லூரிக்கு சாதகமான மதிப்பீட்டு அறிக்கை தருவதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான மூத்த டாக்டரை கருப்பு பட்டியலில் சேர்த்து தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வியின் தரம், போதிய பேராசிரியர்கள் நியமனம், அடிப்படை வசதிகள் குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் நடத்தும் ஆய்வில் பல மோசடிகள் நடந்த விவகாரம் சிபிஐ விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக மடாதிபதி உட்பட 35 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த விவகாரம் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பாகி உள்ள நிலையில், சிபிஐ கைது செய்த மூத்த டாக்டர் ஒருவரை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான மதிப்பீட்டு அறிக்கையை தர ரூ.10 லட்சம் வாங்கியதாக அந்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரி 2025-26 கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் தற்போதைய இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய பாடப்பிரிவுகளை தொடங்கவும் என்எம்சி தடை விதித்துள்ளது.
இது குறித்து என்எம்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் கல்லூரிகளில் ஆய்வு நடத்த அனுப்பப்படும் மதிப்பீட்டாளர்கள் என்எம்சியால் பணி அமர்த்தப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறார்கள். என்எம்சி அதன் அனைத்து பணிகளிலும் மிகுந்த நேர்மையை கொண்டிருக்கவும், அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் உறுதிபூண்டுள்ளது. எனவே எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் ஊழலையும் கவுன்சில் பொறுத்துக் கொள்ளாது. அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்’ என கூறி உள்ளது.