சென்னை: முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில், ஹாக்கி இந்தியா ஆதரவுடன் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 27ம் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் பிரிவில் (40 வயதுக்கு மேற்பட்டோர்) தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், சண்டிகார், மராட்டியம், ஆந்திரா, அரியானா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, கேரளா, புதுச்சேரி ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மகளிர் பிரிவில் (35 வயதுக்கு மேற்பட்டோர்) தமிழ்நாடு, கேரளா, இமாசல பிரதேசம், மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, அரியானா, ஒடிசா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த தகவலை ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி சங்கத்தின் தலைவருமான சேகர் மனோகரன் நேற்று தெரிவித்தார். அத்துடன் போட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 6 தோல்வியை தழுவியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்து அவர் கூறுகையில்,‘‘ இந்த தோல்வி குறித்து அதிகம் கவலை கொள்ள தேவையில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணியின் பயிற்சி முகாமில் இடம் பெறும் வீரர்களின் எண்ணிக்கை 24 மற்றும் 30-ல் இருந்து தற்போது 36, 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சுழற்சி முறையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி இந்திய அணி நல்ல நிலையிலேயே உள்ளது’’ என்று அவர் கூறினார்.