தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக 65 கிலோ மீட்டர் தூரம் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 40 கிலோ மீட்டர் தூரம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளது.கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகா மாநிலம் வரை கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப்பணி ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவின் கொச்சியில் இருந்து பாலக்காடு வழியாக பெங்களூருக்கு செல்லும் இந்த பைப்லைன் மற்றொரு கிளையுடன் கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு பெரிய பிரிவுகளில் கேரளா மற்றும் கர்நாடகா வழியாக கொச்சி மற்றும் மங்களூரு இடையே 450 கிலோ மீட்டர் ராட்சத பைப்லைன் பதிக்கும் பணியும், கேரளா கூட்டநாடு மற்றும் பெங்களூர் இடையே 439 கிலோ மீட்டர் ராட்சத பைப்லைன் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு வட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடத்தினர். இண்டூர் பாலவாடி அருகே கெயில் நிறுவனம் சார்பில் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022 ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினர். விவசாய நிலத்தின் வழியாக குழாய் பதிக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலையின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என தெரிவித்து விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கணேசன் என்ற விவசாயி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதையடுத்து, அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கக் கூடாது. தேசிய நெடுஞ்சாலையோரமாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வலுவடைந்த நிலையில், தமிழக அரசு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கெயில் திட்டத்தை தமிழகத்தின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதிக்க முடியாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது ராட்சத பைப்கள் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக பதிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
பெங்களூர், ஓசூர் உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, சோகத்தூர், தர்மபுரி வழியாக புதியதாக அமைக்கப்பட்ட தர்மபுரி – ஓசூர் நான்குவழி விரைவுச்சாலை வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. தடங்கம், நல்லம்பள்ளி அருகே பழைய தங்க நாற்கர நான்கு வழிச்சாலையின் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும்பணி தீவிரமாக நடக்கிறது. கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தப்பள்ளியில் இருந்து தர்மபுரி மாவட்டத்தில் ராட்சத எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 65 கிலோ மீட்டர் தூரம் கெயில் நிறுவனம் மூலம் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதுவரை 40 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் ராட்சத குழாய்கள் பதிக்கும்பணிகள் முடியும் என்றனர்.