சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவிலின் கிழக்குக் கோபுரத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்கிறார்கள். அனைவரும் கரங்களைக் கூப்பி கண்களில் நீர் பனிக்க அந்த கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருக்கிறார்கள்.
திசைக்கு ஒன்றாக நான்கு நெடிதுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது இக்கோயில். இவற்றில் குறிப்பாக கிழக்கு கோபுரத்தில் பரத நாட்டிய பாவங்களைக் காட்டும் நூற்றியெட்டு சிற்பங்கள் அழகுற நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த சிற்பங்களையா கரம் கூப்பி பார்த்து நெகிழ்கிறார்கள்? இல்லை, வேறொரு காரணம் இருக்கிறது.
கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயில்தான். அந்தத் தில்லைக் கூத்தனின் களிநடனமே இந்த பிரபஞ்சத்தின் இயக்கமாகிறது. அதாவது ஆன்மிகத்திலும் சரி, அறிவியலிலும் சரி, நம் பாரத தேசமே உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடி என்று பறைசாற்றக் கூடிய பல ஆதாரங்கள் இந்தக் கோயிலில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டைச் சிறப்பிக்கும் அற்புத வழிபாடு ஒன்றும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகத்தான் கோயிலுக்கு வெளியே, அந்த கோபுர வாசலில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். நேரம் ஆக, ஆக அவர்களிடையே பரபரப்பு அதிகரிக்கிறது. இது வெறும் பக்திப் பரவசமல்லை, அதற்கும் மேலே.
கோவிலுக்குள்ளே சில தீட்சிதர்கள் கூடுகிறார்கள். தேச நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. கூடவே மங்கலமாக தவில் பக்க வாத்தியத்துடன் நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது. ஒரு அகன்ற வெள்ளித் தட்டு கொண்டு வரப்படுகிறது. அதில் மூவர்ணங்களுடன் பளபளக்கும் இந்திய தேசியக் கொடியை மடித்து வைக்கிறார்கள்.
இந்தத் தட்டு மூலவர் நடராஜர் சந்நதிக்குக் கொண்டு செல்லப் படுகிறது. அங்கே அந்தத் தில்லைக் கூத்தனின் பாதத்தில் அதை சமர்ப்பிக்கிறார்கள். மீண்டும் தூய தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. பிறகு இறைவன் அனுமதியளித்ததை மானசீகமாக உணர்ந்து அந்தத் தட்டைக் கருவறையிலிருந்து வெளியே கொண்டு வருகிறார்கள்.
அந்தக் கொடியைப் பிரித்து, ஒரு நீண்ட கழியில் கட்டுகிறார்கள். தீட்சிதர்களின் மந்திரம் முழங்க, நாதஸ்வர இசை முன்னே செல்ல அந்தக் கொடியை கோவிலின் உள் பிராகாரத்தில் பிரதட்சணமாக எடுத்து வந்து, கிழக்கு
கோபுரத்தை அடைகிறார்கள்.
கோவிலுக்கு உள்ளிருந்தபடியே கோபுரத்தினுள் செல்லும் படிகள் வழியாக மேலே ஏறுகிறார்கள். கோபுரத்திற்கு மேலே வந்ததும், அந்த ஏழாம் நிலையின் வாசல்வழியாக வெளியே வந்து, பக்கவாட்டில் உள்ள இரும்புப் படிகள் வழியே இன்னும் மேலேறி, கோபுர உச்சியில், தாம் கீழிருந்து கொண்டுவந்த தேசியக்கொடிக் கம்பத்தைப் பொருத்துகிறார்கள்.
மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. கீழே குழுமியுள்ள பக்தர்கள், தம் கன்னங்களில் உள்ளங்கைகளால் தட்டிக் கொண்டு தம் தேசிய பக்தியைத் தெரிவிக்கிறார்கள். சிலர், இரு கரங்களையும் தம் சிரசின் மேலே உயர்த்தி ‘நம சிவாய… பாரத மாதா கீ ஜெய்… நமசிவாய‘ என்று நெக்குருக பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
கீழே கோயில் சுவரில் ஒரு கற்பலகை பதிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஜெய்ஹிந்த் – சர்வசித்து வருஷம் ஆடி மாதம் 30ம் தேதி (15.8.1947) – இந்தியா சுதந்திரம் பெற்ற நன்நாள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கற்பலகைக்கு மலர்கள் தூவி மரியாதை செய்யப்படுகின்றன நிறைவாக, இந்தியக்கொடிக்கு தீபாராதனை காட்டப்படுகிறது.
இந்த தேசிய பக்தித் திருவிழா இந்தியா சுதந்திரம் பெற்ற மறுவருடத்திலிருந்தே கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். இப்படி இந்த கொடி உற்சவத்தைக் காண வரும் பக்தர்களுக்குப் பயன் தரும் செடிகளும், மரக்கன்றுகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இது ஒவ்வொரு வருடமும் தவறாமல் அனுசரிக்கப்படும் சம்பிரதாயம்.