* சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.3,586 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது.
* இதில், ஒன்றிய அரசின் பங்கு 60 சதவிதம் அதாவது ரூ.2,152 கோடி.
* மாநில அரசின் பங்கு 40 சதவீதம் – ரூ.1,434 கோடி.
* ஒன்றிய அரசு தனது பங்கை 4 தவணைகளில் விடுவிக்கும்.
* 2024-25ம் ஆண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதம் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை.
சென்னை, ஆக.28: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்
கீழ் தமிழகத்திற்கான ரூ.573 கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் திட்ட ஒப்புதல் வாரியம் 2024-25ம் ஆண்டிற்கான ரூ.3,586 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதம். அதாவது ரூ.2,152 கோடி, மாநில அரசின் பங்கு 40 சதவீதம் ரூ.1,434 கோடி ஆகும். ஒன்றிய அரசு தனது பங்கை 4 தவணைகளில் விடுவிக்கும். 2024-25ம் ஆண்டிற்கான முதல் தவணை ரூ.573 கோடி ஜூன் மாதம் வந்திருக்க வேண்டும். இருப்பினும், நிதியை விடுவிப்பது குறித்து தமிழகத்தின் கடிதங்களுக்கு ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. இதன் காரணமாக 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுதல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கான தற்காப்புப் பயிற்சி மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசின் நிதியில் கடந்த சில மாதங்களாக சமக்ர சிக்ஷா அபியான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இனி, ஒன்றிய அரசின் பங்களிப்பு இல்லாமல் இத்திட்டத்தை நடத்துவது சவாலாக இருக்கும். டெல்லியில் ஜூலை மாதம் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டங்களின் போது, நிதியை வெளியிட பி.எம். பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பி.எம். பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதியை தவிர்த்து, ஒப்புதல் பெறுவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பி.எம் ஸ்கூல்ஸ் பார் ரைசிங் இந்தியா (பி.எம். ) திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. இதுதவிர, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 5+3+3+4 பாடத்திட்ட அமைப்பு மற்றும் தேசிய கல்வி கொள்கையின் படி 6ம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன. 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இரு மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான நீதிபதி டி முருகேசன் தலைமையில் ஒரு குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த மாநிலக் கல்விக் கொள்கை குழு அதன் பரிந்துரைகளில் மும்மொழி கொள்கையை நிராகரித்தது. மேலும் 3, 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளையும் எதிர்த்தது. தமிழ்நாட்டைப் போலவே, கேரளா, மேற்குவங்கம், டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற சில மாநிலங்களும் பி.எம். பள்ளிகளை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
மாணவர்களின் கல்வியில் முதன்மையான நலத்திட்டமாக சமக்ர சிக்ஷா அபியான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இதை இப்படி நடத்த முடியாது. ஏனெனில் இது ஏழை பின்னணியில் இருந்து வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை பாதிக்கலாம். சமக்ரா சிக்ஷா மற்றும் பி.எம். பள்ளி ஆகியவை ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்கள். மாநில அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, சமக்ரா சிக்ஷா நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பதில் எந்த நியாயமும் இல்லை, தமிழக எம்பிக்கள் இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.