திருச்சி: அனைவருக்கும் கல்வி திட்ட நிதி ₹573 கோடியை விடுவிக்க வேண்டுமென்றால் தேசிய கல்வி கொள்கையை ஏற்ேற ஆக வேண்டும் என தமிழகத்துக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் ஒப்புதல் வாரியம் 2024-2025க்கான ₹3,586 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதம், அதாவது ₹2,152 கோடி. மாநில அரசின் பங்கு 40 சதவீதம் ₹1,434 கோடி. ஒன்றிய அரசு தனது பங்கை 4 தவணைகளில் விடுவிக்கும். 2024 – 2025க்கான முதல் தவணை ₹573 கோடி ஜூன் மாதம் வந்திருக்க வேண்டும். தமிழக அரசு, அந்த பணத்தை விடுவிக்க கோரி பல முறை கடிதம் அனுப்பியும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் உள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் அந்த தவணை பணத்தை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு விடாப்பிடியாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ₹573 கோடி நிதி ஜூன் மாதம் வர வேண்டியது இன்னும் வரவில்லை. இதுகுறித்து முதல்வரும், அமெரிக்கா செல்வதற்கு முன் ஒன்றிய அரசை வலியுறுத்தினார். நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்பிக்களும் ஒன்றிய கல்வி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினர். தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை சார்பில் கடிதங்களும் எழுதினோம். அதற்கு உரிய பதில் வரவில்லை. ₹573 கோடி மட்டுமல்ல, கடந்தாண்டு தமிழக பள்ளி கல்வித் துறைக்கு வரவேண்டிய கடைசி தவணையான ₹249 கோடியையும் அவர்கள் வழங்கவில்லை.
புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி வழங்குவோம் என கூறுகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது 2020ல் கொண்டு வரப்பட்டது. ஆனால் 2018ம் ஆண்டே அனைவருக்கும் கல்வி திட்டம் துவங்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே அந்த நிதியை முறையாக ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என ஒன்றிய அரசும் கூறுகிறது. ஆனால் ஏதோ காரணம் கூறி அதற்கான நிதியை ஒதுக்க மறுக்கிறார்கள்.
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் தான் நிதி கொடுப்போம் எனக்கூறுவது நியாயம் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் இணைந்தே ஆக வேண்டும் என்கிற அழுத்தத்தை ஒன்றிய அரசு தருகிறது. மும்மொழிக் கொள்கையை, தமிழகத்தின் மீது வற்புறுத்துவது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம். உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. அது 2 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. அப்படி என்றால் அவர்கள் நம்மை ஊக்குவித்து கூடுதலாக பணம் ஒதுக்கி தமிழகத்தின் மாதிரியை மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவோம் என கூறுவது தான் ஆரோக்கியமாக இருக்கும்.
கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தை ஏன் தருகிறார்கள் என கேட்க தோன்றுகிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் நிதியை நிறுத்துவது சரியல்ல. ஒன்றிய அரசு, முறையாக அந்த நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். அந்த நிதி ஒதுக்கப்படாததால் 15,000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக்கூடிய நிலை ஏற்படும். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், ஆசிரியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கவும் முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.