புதுடெல்லி: ராஜிவ் காந்தியின் 80வது பிறந்தநாளையொட்டி, ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தேசத்தின் மீதான உங்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் அப்பா’’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லி வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்… அப்பா, உங்கள் அறிவுரைகள் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. உங்களது நினைவுகளுடன் இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜிவின் மகளுமான பிரியங்கா , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.