பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் 5 வார்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வீட்டு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் நாட்டார்மங்கலம் – ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு நிலவியது. இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.