சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அக்கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். தற்போது, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் விலகியுள்ளனர். இதுதொடர்பாக தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் தங்கம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அண்மைக் கால நடவடிக்கைகள், தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது. சேலத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம் ஆட்கள் குறைப்பு, ஊதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஆலையை மூடுவதாக தெரிவித்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து, தொழிற்சங்கத்தின் சார்பில் பல மாதங்களாக போராடி வருகிறோம். இதற்கு ஆதரவு தெரிவிக்க, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டுகொள்ளவில்லை. மேலும், எங்களுக்கு போராட்ட ஆதரவோ, போராட்ட வழிகாட்டுதலோ வழங்கவில்லை. இதனால் மனவேதனையுடன் அத்தொழிற்சங்கத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ேடார் விலகுகிறோம். அதேசமயம் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.