உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், மானாம்பதி கூட்ரோடு பகுதியில் வசித்து வரும் 171 நரிக்குறவர் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, ஒன்றிய குழு உறுப்பினர் தயாளன், பேரூராட்சி மன்றத்தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் மறுகட்டுமான பணிக்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் பாரிவள்ளல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.