சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 16,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22,447 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 42,337 கிலோ கஞ்சா, 1.2 கிலோ ஹெராயின், 223 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் நடக்க போதைப்பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளது.
இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் ‘போதைப்பொருட்களற்ற தமிழ்நாடு’ உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் கடந்த ஆண்டு 2022 முதல் கடந்த ஜூன் மாதம் வரை அதாவது ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 16,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா வியாபாரிகள் உள்பட 22,447 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடத்தி வந்த 42 ஆயிரத்து 337 கிலோ கஞ்சா, ஒரு கிலோ 234 கிராம் ஹெராயின், 223 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 154 போதைபொருள் விற்பனை வியாபாரிகளுக்கு சொந்தமான 45 எண்ணிக்கையிலான ரூ.18.15 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் 4,956 வங்கி கணக்குகள் முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒரே இடத்தில் அழிக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* முடக்கப்பட்ட சொத்துகள்
2022ம் ஆண்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த 118 குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.17 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் 3,700 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2023ம் ஆண்டு ஜூன் வரை 33 குற்றவாளிகளின் ரூ.1.15 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. மேலும், போதை பொருட்கள் வழக்கில் தொடர்புடைய 1,256 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்
ஆண்டு கஞ்சா
(கிலோ) ஹெராயின்
(கிராம்) போதை
மாத்திரைகள்
2022 28,384 0.556 98
2023 (ஜூன் வரை) 13,953 0.678 125
தமிழ்நாடு முழுவதும் வழக்குகள்
ஆண்டு வழக்குகள் கைதானவர்கள்
2022 10,665 14,934
2023 (ஜூன் வரை) 5,358 7,513