கறவை மாடுகள் கன்று ஈன்ற பின்னர் அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளில் முதன்மையானதும், முக்கியமானதுமாக இருப்பது நஞ்சுக்கொடி தங்குதல். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர் நஞ்சுக்கொடி தங்குதலுக்கான காரணங்களையும், அதைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கன்று ஈன்றதும் கருப்பைக்கு வரும் ரத்தத்தின் அளவு குறைகிறது. அப்போது வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நஞ்சுக்கொடி கீழ்நோக்கு விசையால் வெளியே தள்ளப்படுகிறது. சினைமாடுகளை ஒரே இடத்தில் கட்டி வைத்துப் பராமரித்தல், சினைமாடுகளுக்கு சினைக் காலத்தில் அளிக்கப்படும் கலப்புத் தீவனத்தில் புரதச் சத்து, மாவுச் சத்து, தாது உப்புகள் மற்றும் உயிர்ச் சத்துகள் குறைவாக இருத்தல், புரூசல்லோஸிஸ், லெப்டோஸ்பைரோஸிஸ், வீப்ரியோஸிஸ், ஐ.பி.ஆர். போன்ற நோய்களால் ஏற்படும் கருச்சிதைவு, சினைமாடுகளின் உடலில் கன்று வளர்ச்சிக்காக உற்பத்தியாகும் புரஜஸ்டிரான் குறைவு மற்றும் கார்டிசால் (கருச்சிதைவு ஏற்படுதல்) அதிகரிப்பால் ஏற்படும் கருச்சிதைவு, நஞ்சுக்கொடியில் அதிக நீர் சேருதல் போன்ற பிரச்சினைகளால் நஞ்சுக்கொடி தங்குகிறது.
நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்
நஞ்சுக்கொடி கருப்பையிலேயே தங்கிவிடும்போது, ரத்த ஓட்டமின்மையாலும், தொற்றுகளாலும் அழுகி, நச்சுத் தன்மையை உண்டுபண்ணும். இதனால், கருப்பையின் திசுக்களும், செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு, அடுத்த இனப்பெருக்க சுழற்சி பாதிப்பு அடையலாம். மேலும், நச்சானது ரத்தத்தில் உறிஞ்சப்படும்போது, அவை மற்ற உறுப்புகளுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பால் கறவாமை, மடிநோய், குளம்பு அழுகல் நோய் மற்றும் பால் காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். இதைத் தவிர, நச்சுகளுடன் பெருகிய நுண்கிருமிகளும் சேரும்போது, டாக்ஸிமியா என்னும் நிலை ஏற்பட்டு, அதிக காய்ச்சலால் பாதிக்கப்படுகிறது. சில சமயங்களில் இறக்கவும் நேரிடலாம். எனவே, சுகாதாரமான முறையில் நஞ்சுக்கொடிகளை வெளியேற்ற வேண்டும். தவறான முறைகளைப் பின்பற்றி நஞ்சுக்கொடிகளை வெறியேற்றும்போது, கருப்பையில் காணப்படும் கேரங்கிகள் சேதப்படுத்தப்பட்டு, அதிக உள் ரத்தப் போக்கினால் மாடுகள் மூர்ச்சையாகி இறந்துவிடுகின்றன.
சிகிச்சை முறைகள்
கன்று ஈன்று 8-10 மணி நேரம் கழித்தும் நஞ்சுக்கொடி வெளியே தள்ளப்படவில்லையெனில், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நஞ்சுக்கொடியை அகற்றுவதற்கு முன், கன்று ஈன்று 8-10 மணி நேரம் ஆகிவிட்டதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு செயல்பட்டு கன்றினையும், தாய்ப்பசுவையும் முறையாக பராமரிப்போம்.