அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
– இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
“ஸ்ர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கநவாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்”
நங்கநல்லூர் என்று சொன்னாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது 32 அடி ஆஞ்சநேயர் திருக்கோயில்தான். எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணருடனும், அருள்தரும் ஸ்ரீகிருஷ்ணருடன் ருக்மணி சத்யபாமா குடிகொண்டுள்ள திருத்தலங்கள், தொண்டை நாட்டில் பல உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்த சென்னை நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதி ஹரபக்த ஆஞ்சநேயர், விஸ்வரூப தரிசனமாகப் பக்தர்களுக்கு காட்சி தருவது, இத்திருத்தலத்தில் மட்டுமே என்பது சிறப்பாகும்.
ஸ்ரீராம ரட்சை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு, சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவமானது, நிகழும் சோபகிருது வருடம் ஆடி மாதம் 12-ஆம் தேதி (28.7.2023 – வெள்ளிக்கிழமை) ஏகாதசி திதி, மூலம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், மாலை 6.00 மணிக்கு பூர்வாங்கம் பூஜைகள் ஆரம்பித்து, ஆடி மாதம் 16-ஆம் தேதி (1.8.2023 – செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. அன்று மாலையே, சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்று திருப்பவித்ரோத்ஸவம் நிறைவு பெறுகிறது. பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுகிறோம்.
தொகுப்பு: குடந்தை நடேசன்