ஆலந்தூர்: சென்னை நங்கநல்லூர் முதல் மற்றும் 4வது பிரதான சாலை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு நிழல் கொடுத்த பழைய மரங்களை நேற்று துண்டு துண்டுகளாக வெட்டி அகற்றும் பணிகள் நடந்தது. இதற்குமுன் ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள பழைய மரங்கள் பாதிக்க வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
எனினும், நங்கநல்லூர் முதல் பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் பணிக்கு இடையூறாக இல்லாத 12 பழைய மரங்கள் நேற்று துண்டு துண்டாக வெட்டி அகற்றப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள், நலச்சங்கத்தினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்தூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். எனினும், இம்மரங்களை வெட்டி அகற்றுவதற்கு கடந்த 3 மாதங்களுக்கு மாவட்ட பசுமை குழு அனுமதி பெற்றிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால், இது அரசு திட்டம். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி புகாரை பெற மறுத்துள்ளனர். இதையடுத்து, மழைநீர் கால்வாய் பணிக்காக பழமையான மரங்கள் துண்டு துண்டுகளாக வெட்டி அகற்றப்படுவது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். எனினும், புதிதாக கட்டப்படும் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாக பேருந்து நிறுத்தம், மின்மாற்றி மற்றும் மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.