கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய ஊர்களைப் பட்டியலிட்டால் மேட்டுப்பாளையத்திற்கு முக்கிய இடத்தைத் தர வேண்டி இருக்கும். தமிழர்களின் கனவுப்பிரதேசமான ஊட்டிக்கு இங்கிருந்துதான் மலை ரயில் கிளம்புகிறது. தமிழர்களின் சமையலில் பிரிக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் பூண்டுக்கு இந்த ஊர்தான் தலைநகரம். அழகிய தேரோடும் காரமடை இங்குதான் இருக்கிறது. இப்படி பல சிறப்புகள் கொண்ட மேட்டுப்பாளையம் விவசாயம் செய்வதற்கும் மிக உகந்த பூமி. கறிவேப்பிலை, வாழை, காய்கறிகள் என பலவும் இங்கு செழித்து வளரும். நல்ல மண்வளம், தண்ணீர் வளம் என இயற்கை வளங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தை பசுமையாகவே வைத்திருக்கின்றன. இந்தப் பகுதியில் விளையும் வாழைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் கேரள வியாபாரிகள் மேட்டுப்பாளையத்தில் வட்டம் அடித்து வாழைத்தார்களை கொள்முதல் செய்கிறார்கள். இப்பகுதியில் வாழை சாகுபடியில் கலக்கி வரும் விவசாயிகளைத் தேடியபோது சம்பரவள்ளி விஸ்வநாதனைத்தான் அனைவரும் கைகாட்டினர். காரமடை, சிறுமுகை பகுதிகளில் பயணித்து கடைசியாக சம்பரவள்ளி கிராமத்தை அடைந்தோம். சுற்றிலும் மலைத்தொடர்கள், பசுமையான வயல்கள் என அழகிய கிராமமாக காட்சியளிக்கும். இந்த ஊரில் தனது 10 ஏக்கர் நிலத்தில் வாழை, பூசணி, காய்கறி என கலவையாக விவசாயம் பார்க்கும் விஸ்வநாதனைச் சந்தித்தோம்.
“விவசாயத்தில் பயிர் சுழற்சி முறையைக் கண்டிப்பா கடைபிடிக்கணும். பல நன்மைகள் பயிர் சுழற்சி முறையில கிடைக்குறதால என்னோட நிலத்துல வாழை, மஞ்சள், காய்கறின்னு மாத்தி மாத்தி சாகுபடி செய்யுறேன். 10 ஏக்கர் நிலத்தைப் பிரிச்சி இயற்கை முறையிலயும், செயற்கை முறையிலயும் தனித்தனியா பயிர் செய்யுறேன். இப்போ ஒன்றரை ஏக்கர்ல இயற்கை முறையில நேந்திரன் வாழையைப் பயிர் பண்ணி இருக்கேன். இதுல தார்கள் நல்ல திரட்சியா விளைஞ்சி அறுவடைக்கு தயாராகிட்டு வருது’’ என பேச ஆரம்பித்த விஸ்வநாதனிடம் இயற்கை முறையில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து கேட்டோம். “நேந்திரன் வாழையை ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள்ல நடவு செஞ்சா சிறப்பா இருக்கும். நான் போன வருசம் ஆகஸ்டு மாசத்துல நடவு பண்ணேன். நிலம் ஈரப்பதமாக இருக்குற சமயத்துல 3 தடவை கொக்கிக் கலப்பை வச்சி நல்லா உழவு ஓட்டுனோம். அப்புறமா ரொட்டோவேட்டர் வச்சி கட்டி இல்லாம உழவு பண்ணோம். இதனால் நிலம் பொலபொலப்பா மாறிச்சி. கடைசி உழவு ஓட்டும்போது ஏக்கருக்கு 20 டன்னுங்குற கணக்குல தொழுவுரம் போட்டோம். மாட்டுச்சாணத்தையும், ஆட்டு உரத்தையும் கலந்து தொழுவுரமா வச்சோம். அதுக்கப்புறம் 8 அடி இடைவெளியில பார் அமைச்சோம்.
அதுல 1 அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி நீளம்னு குழியெடுத்து கன்று நட்டோம். கன்று நடுறதுக்கு முன்னாடி சூடோமோனாஸ் விரிடியில கன்றுகளை நனைச்சி நட்டோம். நட்ட பிறகு சொட்டுநீர் மூலமா உயிர்த்தண்ணீர் கொடுத்தோம். அதுக்கப்புறம் 4 நாளுக்கு ஒரு தடவை பாசனம் செஞ்சோம். இதுல தண்ணி தேங்கி நிக்கக்கூடாது. தேங்கி நின்னா கன்று அழுகி சேதமாகிடும். இதனால காய்ச்சலும், பாய்ச்சலுமான பாசனம் செய்வோம். கன்று நட்ட 2வது மாசத்துல இருந்து மீன் அமிலம், பஞ்சகவ்யத்தையும் இலை வழியா ஸ்பிரே பண்ணுவோம். இது ரெண்டையும் ஒண்ணா கொடுக்கக்கூடாது. ஒரு தடவை மீன் அமிலம்னா அடுத்த தடவை பஞ்சகவ்யத்தைக் கொடுக்கணும். இதை 20 நாளுக்கு ஒருமுறை மாத்தி மாத்தி கொடுப்போம். 3வது மாசத்துல இருந்து மாசம் ஒரு தடவை மண்புழு உரம் வைப்போம். செடியைச் சுத்தி வட்டமா குழிதோண்டி அதுல மண்புழு உரத்தைப் போடுவோம். அதோடு மண்மணம்னு ஒரு இயற்கை உரத்தையும் போடுவோம். இந்த உரத்தை விவசாயிகளே சேர்ந்து தயார் பண்றோம். பூச்சி, நோய் வராம இருக்க வரும்முன் காப்போம் முறையில ஏதாவது செஞ்சிக்கிட்டே இருப்போம். முக்கியமா மூலிகை பூச்சி விரட்டி தயாரிச்சி அடிப்போம். வாழைக்கன்றுகளை நட்ட பிறகு நிலத்துல ஊடுபயிர் செய்வோம். நாங்க 3 மாசப் பயிர்களான அரசாணி, பூசணிக்காய்களையும், 90 நாள்ல அறுவடை பண்ற கொத்தமல்லித் தழையையும் சாகுபடி செய்வோம். இந்த தடவை வெண்பூசணியை ஊடுபயிரா போட்டோம்.
3 மாசத்துல அறுவடை பண்ணிட்டோம். ஏக்கருக்கு 9 டன் மகசூல் கிடைச்சது. அதை கிலோ 8 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். இதுமூலமா 72 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைச்சது. இதுல விதைக்கிற செலவு மட்டும்தான். வாழைக்கு செய்யுற பராமரிப்பு வேலைகளே பூசணிக்கு ஊட்டமா இருக்கும். காய் அறுவடை செஞ்ச பிறகு அப்படியே மினி டிராக்டர் வச்சி இலை, தழைகளை மடக்கி உழவு ஓட்டுவோம். இதனால நிலத்துக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். வாழை செழிப்பா வளரும். ஊடுபயிர் செய்யுறதால இன்னொரு நன்மையும் இருக்கு. அதாவது ஊடுபயிர் செய்யும்போது களை பிரச்னை இருக்காது. பூசணிக்கொடிகள் படர்ந்து நிலத்தை மூடியிருக்குறதால மற்ற களைச்செடிகள் வளராது. நல்லா பராமரிச்சிட்டு வரும்போது 9வது மாசத்துல மரங்கள்ல குலை தள்ள ஆரம்பிக்கும். அந்த சமயத்துல மூங்கில் கம்பு வச்சி முட்டு கொடுப்போம். நிலத்துல குழியெடுத்து மூங்கில் கம்பை நட்டு, அதை வாழை மரத்தோட சணல் வச்சி கட்டுவோம். மூங்கில் குச்சிகளை குலை இருக்குற பக்கமா நட்டு கட்டணும். அப்பதான் குலையோட எடை மரத்தை சாய்க்காம இருக்கும். இதுல நவதானியத்தைச் சாறு பிழிஞ்சி பயிர் ஊக்கியா கொடுப்போம். இந்தப் பயிர் ஊக்கியை மாசா மாசம் இலைவழியாவும், வேர் வழியாவும் கொடுப்போம்.
நேந்திரன் வாழையை சரியா 12வது மாசத்துல அறுவடை பண்ணலாம். போன வருசம் ஆகஸ்டுல நடவு செஞ்சோம். இந்த ஆகஸ்டுல அறுவடை செய்றோம். இதுல ஏக்கருக்கு 850 மரம் வைப்போம். அதுல 10 சதவீத மரங்கள் சேதமாகிடும். எப்படியும் 750 மரங்கள் பலன் கொடுக்கும். அதுல காய்க்குற குலைகள் ஒவ்வொன்னும் 20 கிலோ எடை கொண்டதா இருக்கும். ஒரு கிலோ காய்க்கு இப்போ 45 ரூபாய் விலை கிடைக்குது. சில சமயங்கள்ல ரொம்ப கம்மி விலைக்கும் போகும். சராசரியாக கிலோவுக்கு 28 ரூபாய் கிடைக்கும். அதன்படி பார்த்தா ஒரு குலைக்கு 560 ரூபாய் விலை கிடைக்கும். செலவுன்னு பார்த்தா ஒரு மரத்துக்கு எப்படியும் 250 ரூபாய் செலவாகும். அதுபோக ஒரு குலையில 310 ரூபாய் லாபம் கிடைக்கும். 750 குலைக்கு 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். அறுவடை பண்ற குலைகளை கேரள விவசாயிங்க வந்து வாங்கிட்டு போயிடறாங்க. நான் இயற்கை முறையில சாகுபடி செய்யுறதால குலைகள் திரட்சியா இருக்கும். இதுக்கு நல்ல விலை கிடைக்கும். வியாபாரிகள் விரும்பி வாங்கிட்டு போவாங்க’’ என புன்னகையுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
விஸ்வநாதன்: 99423 43574.
*மேட்டுப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் ஒன்றிணைந்து அறம் உயிர்ம உழவர்கள் உற்பத்தி குழுமம் என்ற அமைப்பைத் துவங்கி இருக்கிறார்கள். இவர்கள் இயற்கை வழியில் விளைவிக்கும் பொருட்களை கூட்டாக சந்தைப்படுத்துகிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்திற்காக விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
*மேட்டுப்பாளையத்தின் நில அமைப்பு, சீதோஷ்ணம், மண்வளம் உள்ளிட்ட காரணிகளால் இப்பகுதியில் விளையும் பொருட்கள் தரமானவைகளாக இருக்கின்றன. இதனால் இத்தகைய விளைபொருட்களுக்கு தனி ரேட் கிடைக்கிறது என்கிறார்கள்.
*விஸ்வநாதன் பயிர் சுழற்சி முறை, இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் என சிறப்பாக செயல்படுவதால் இவரது வயல் ஒரு முன்மாதிரி வயலாக இருக்கிறது. வேளாண் பேராசிரியர்கள், மாணவர்கள், உழவர்கள் உள்ளிட்டோர் இங்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார்கள்.