நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நாதக முன்னாள் செயலாளர் வக்கீல் வினோத்குமார், நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவார், மதச்சார்பற்ற அரசு அமைய நடவடிக்கை எடுப்பார் என நினைத்து, சுமார் 12 ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சீமானின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. அவர் கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்.
நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுகிறார். மதச்சார்பின்மை பற்றி பேசி விட்டு, தற்போது மதச்சார்பு உள்ள ஒரு கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். கடந்த 2021ம் ஆண்டு, திடீரென அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் பதவியையும் பறித்து விட்டார். பல முறை அவரை சந்தித்து நேரில் பேச முயற்சித்தும் சந்திக்க அனுமதிப்பதில்லை. கட்சியில் இருந்து நான் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணியினர் உள்ளிட்ட சுமார் 50 பேர் விலகியுள்ளோம். மேலும் பலர், கட்சியில் இருந்து விலக தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.