நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அதிமுகவில் மாஜி அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்எல்ஏவுக்கும், நாமக்கல் மாநகர செயலாளரும், மாஜி எம்எல்ஏவுமான பாஸ்கருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை இருவரும் தனித்தனியாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கொண்டாடினர். கடந்த 10ம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூரை சேர்ந்த அதிமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல, நேற்று ஆஞ்சநேயர் கோயிலில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள்விழாவில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மாஜி எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் திரண்டனர். இதுபோல, கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற, மாவட்ட செயற்குழு கூட்டம், எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சி களிலும், பாஸ்கர் மற்றும் நாமக்கல் சட்டமன்ற தொகுதி ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
நாமக்கல் மாவட்ட அதிமுக வரலாற்றில் இல்லாத அளவிற்கு, தற்போது கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. மாஜி அமைச்சர் தங்கமணிக்கும், மாஜி எம்எல்ஏ பாஸ்கருக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் குறித்த பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு: முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்த தங்கமணிக்கும், பாஸ்கருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது. இதனால் நாமக்கல் தொகுதிக்கு பாஸ்கர் கேட்டதை எல்லாம் தங்கமணி செய்து கொடுத்தார். பாஸ்கர் கைகாட்டிய அனைவருக்கும், தங்கமணி கட்சியில் முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஸ்கர் தோல்வி அடைந்தார். பல்வேறு காரணங்களால் தங்கமணி, பாஸ்கர் இடையேயான நட்புறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் பாஸ்கரின் நண்பராக இருந்த நாமக்கல்லை சேர்ந்த பிரபல முட்டை வியாபாரியும் தொழில் அதிபருமான மோகன், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்தார். மாஜி அமைச்சர் தங்கமணியுடன் மோகன் நெருக்கமாக பழகி வந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் பெறும் வகையில், நாமக்கல் பகுதியில் ஆதரவாளர்களை உருவாக்க தொடங்கினார். கடந்த மாதம் தங்கமணி, மோகனுக்கு வர்த்தக அணியில் மாநில இணைச்செயலாளர் பதவி அளித்தார். மேலும் பாஸ்கர் எம்எல்ஏவாக இருந்தபோது, உதவியாளராக வேலை பார்த்து வந்த தினேஷ்க்கு அதிமுக சார்பு அணியில் மாவட்ட பொறுப்பு, ஒரே குடும்பத்தில் தந்தை, மகன் என இருவருக்கு மாவட்ட பொறுப்பு என பாஸ்கருக்கு பிடிக்காத நபர்களை தேடித்தேடி தங்கமணி பொறுப்புகளை வழங்கினார்.
மாநகர செயலாளராக இருக்கும் பாஸ்கரின் பரிந்துரை இன்றி, இந்த கட்சி பதவிகளை தங்கமணி வழங்கியதால் இருவருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. கட்சியில் பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்காமல், கட்சியில் புதியதாக இணைந்தவர்களுக்கு மாவட்ட பொறுப்பு எப்படி வழங்கலாம் என, கடந்த வாரம் நடைபெற்ற நாமக்கல் மாநகர அதிமுக கூட்டத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதை பற்றி, நாமக்கல் அதிமுகவினர் கட்சியின் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.