சென்னை: நாமக்கல்லில் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே. ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி சிறுமி உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு தப்பிக்க முயற்சிக்கும் போது கொடூரமாக கொலை வெறி தாக்குதலால் காயப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் மாணவி உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி சொல்லொண்ணா துயரத்தை அளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் தந்த தமிழக அரசு, வாழ்க்கையை வெறுத்து சொல்லமுடியாத அளவில் துன்பத்தை அனுபவித்து வரும் அச்சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் மற்றும் சிறுமியின் தாயாருக்கு அரசு வேலையையும் வழங்கி அவர்களது துயரத்தை துடைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலதாமதமின்றி உடனே வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.