நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த கல்யாணி பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவருடைய மகள் கோபிகா (17) இவர் நாமக்கல் நல்லிபாளையத்தில் இயங்கி வரும் கோஸ்டல் இளங்கோ ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் 2ம் ஆண்டு கேட்டரிங் படித்து வந்தார். இவரை கல்லூரியின் சார்பில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயங்கிவரும் மகேந்திரவணம் என்ற தனியார் ஓட்டலுக்கு 3 மாத பயிற்சிக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியிலிருந்து அனுப்பியுள்ளது.
அங்கு சில மாணவிகளுடன் கோபிகா தங்கி பயிற்சி பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கோபிகா அதே ஓட்டலில் நேற்று இரவு கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் அந்த மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மாணவி கோபிகா பயிற்சி பெற்ற ஓட்டல் ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகு விரைந்த நிலையில் பிரேதபரிசோதனை கூடம் அருகே கோபிகாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் காவல்துறை நியாயமாகவும்,நேர்மையாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உடலை பெறமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து நாமக்கல் டிஎஸ்பி ஆனந்த் ராஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனு அளித்தால் விரைவாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேதபரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்தனர். மாணவியின் தந்தை புகார் மனு அளித்த நிலையில் பிரேதபரிசோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவி கோபிகாவின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.