*சேலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
நாமக்கல் : நாமக்கல் அருகே, சிபிசிஐடி அதிகாரிகள் எனக் கூறி, டீ கடைக்காரரின் வீட்டில் சோதனை நடத்தி பணம், காசோலை புத்தகம் மற்றும் ஆவணங்களை பறித்துச் சென்ற 3 பேரை, போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பொய்யேரிகரை பிரசன்னா நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை (52). இவர் பரமத்தி ரோட்டில் டீக்கடை வைத்துள்ளார். தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் செய்து வந்த இவர், தற்போது திருந்தி டீ கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் பணம் இருப்பதை அறிந்துகொண்ட திருச்செங்கோட்டைச் சேர்ந்த சபரிநாதன்(39), அவரது நண்பர்களான சேலத்தைச் சேர்ந்த இலியாஸ் (38), இலுப்புலியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (33) ஆகிய 3 பேரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லதுரையை செல்ேபானில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, தாங்கள் சென்னையில் உள்ள சிபிசிஐடி தனிப்பிரிவில் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர். பின்னர், அவர் மீது வழக்குகள் இருப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தரவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து, கடந்த 26ம் தேதி இரவு சபரிநாதன், இலியாஸ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரும் செல்லதுரையின் வீட்டுக்கு சென்றனர். அப்போது, தாங்கள் சோதனை நடத்த வந்துள்ளதாக கூறி, அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரொக்கம், ஆவணங்கள் மற்றும் செல்லதுரையின் கையெழுத்திட்ட காசோலை புத்தகம் ஆகியவற்றை எடுத்துச்சென்றனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்வோம் செல்லதுரையை மிரட்டி விட்டு சென்றனர். இதனால் பயந்து போன செல்லதுரை, இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கிக்கு, செல்லதுரையின் காசோலை வந்துள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்பு, செல்லதுரையின் வங்கி கணக்கில் இருந்து ₹3 லட்சம் பணம் எடுத்திருப்பதாக, அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக நாமக்கல் போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சபரிநாதன், இலியாஸ், மாதேஸ்வரன் ஆகியோர், சிபிசிஐடி போலீசார் எனக் கூறி ஏமாற்றி செல்லதுரையின் வீட்டில் இருந்து பணம், காசோலை ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சபரிநாதன், இலியாஸ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரையும், போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ₹1.65 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், அவர்கள் 3 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள், பல்வேறு காவல் நிலையத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சபரிநாதன் இதுபோன்று அடிக்கடி தனிப்பிரிவு போலீசார், வருமான வரித்துறை அலுவலர் எனக்கூறி, ஏராளமானோரை மிரட்டி பணம் பறித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.