சென்னை: வாடிக்கையாளரை இறக்கி விட வந்த போது, நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் கார் டிரைவரை தாக்கினர். இதனால் 40க்கும் மேற்பட்ட கார் டிரைவர்கள் ஓட்டல் முன்பு போராட்டம் நடத்தினர். சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த அழகுமுத்து(55). தனியார் கால் டாக்சி நிறுவன கார் டிரைவர். நேற்று இரவு விமான நிலையத்தில் இருந்து வாடிக்கையாளரை ஏற்றி கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார்.
வாடிக்கையாளர் ஓட்டலின் முன்பு காருக்கான வாடகையை ஜிபே மூலம் அனுப்பி கொண்டிருந்தார். அப்போது ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் காரை ஓரமாக நிறுத்துமாறு டிரைவர் அழகுமுத்துவிடம் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஓட்டலில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண்(32), சதீஷ்(28), ரூபன்(35), செந்தில் குமார்(43) ஆகியோர் டிரைவர் அழகுமுத்துவை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து டிரைவர் சக டிரைவர்களுக்கு தகவல் அளித்தார். அதன்படி 40க்கும் மேற்பட்ட கால் டாக்சி டிரைவர்கள் ஓட்டல் முன்பு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது டிரைவர் மீது தாக்குதல் நடத்திய ஓட்டல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். தேனாம்பேட்டை போலீசார் போராட்டம் நடத்திய டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து டிரைவர்கள் கலைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.