பெரியவர்களையே ‘ஹேய் நகத்தைக் கடிக்காதே’ என அவ்வப்போது அதட்டுவதைப் பார்த்திருக்கிறோம். எனில் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக தடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தை ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தால், அல்லது பள்ளியில், வீட்டில் இருக்கும் உறவினர்கள், வெளியே நண்பர்கள் என ஏதோ வகையில் குழந்தைகள் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள் என்று அர்த்தம். எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும் கூட அவர்கள் வாழ்க்கை ஏதோ சலிப்பை உண்டாக்கி, போரடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என அர்த்தம். தொடர்ந்து நகம் கடிப்பதால் சிறுவயதிலேயே நக இடுக்குகள், கியூட்டிக்கிள்கள் பாதிக்கப்படும். மேலும் நகம் வளர்ச்சியிலும் தடை உண்டாகும். அதிக நேரம் ஈரத்தன்மையுடன் இருப்பதால் நக இடுக்குகளில் பூஞ்சைத் தொற்று உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் கடிக்கும் போது தெரியாது, ஒரு கட்டத்தில் அதிகம் நகத்தைக் கடித்து அது இரத்தம் வருமளவுக்கு மாறி வலியைக்கூட உண்டாக்கும். எனவே உங்கள் குழந்தை நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனை சில வழிகளைக்கொண்டு தடுக்கலாம்.
திசை திருப்புங்கள்!
உங்கள் குழந்தை செய்வதற்கு எந்த வேலையும் இல்லாத பட்சத்தில் சும்மா இருக்க முடியாமல் நகம் கடிக்க வாய்ப்புகள் உண்டு. எனில் குழந்தையுடன் அதிகம் நேரம் செலவிடுங்கள், புதிர் விளையாட்டு, கியூப் பாக்ஸ் , கேரம், செஸ் உள்ளிட்ட விரல்களுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளால் அவர்களை திசை திருப்பலாம்.
கைகளுக்கு வேலை கொடுங்கள்
ஓவியம், இசைக்கருவிகள் வாசிப்பு, கைவினைப் பொருட்கள் செய்தல், எழுத்துப் பயிற்சி, என கைகளுக்கு அதிகம் வேலை கொடுக்கும்போது நகம் கடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
பேசுங்கள்!
ஒருசில குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை , வெளிப்புற இடையூறுகளை மனதில் போட்டுக் குழம்பும் போது நகம் கடிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். எனில் அவர்கள் எவ்விதமான பிரச்னையில் இருக்கிறார்கள் என்பதை கேட்டுப் பேசி அவர்களுக்கு தைரியம் கொடுக்கலாம். மன அழுத்தம், சிந்தனை, பயம், தயக்கம் கைவிடப்பட்ட நிலை இவற்றால் கூட குழந்தைகள் நகம் கடிப்பார்கள் என்பதால் அதில் கவனம் செலுத்தலாம்.
தூங்க வைக்கலாம்!
வயிற்றுக்குத் தேவையான சாப்பாடு கிடைத்தால் தானாகவே தூக்கம் வருவது இயல்பு. எனில் தக்க சமயத்தில் சரிவிகித ஊட்டச்சத்துடன் ஆகாரம் கொடுத்து அவர்கள் தூங்கச்செய்ய முயற்சிக்கலாம். உடலும் மனமும் ஓய்வு பெற்றாலே இயல்பு நிலை திரும்பும்.
பள்ளியிலும் தெரிவியுங்கள்
வீட்டில் நகம் கடிப்பதைக் கண்டவுடன் நிறுத்துவது போலவே பள்ளியிலும்,டியூஷன், மற்றும் இதர பயிற்சி இடங்களிலும் கூட குழந்தை நகம் கடிக்கும் பழக்கத்தைத் தெரிவித்து கண்டிக்கும் படி கூறுங்கள். திரும்பத் திரும்ப கண்டிக்கும் போதும் சொல்லும் போதும் குழந்தை அந்தப் பழக்கத்தை நிறுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உடற்பயிற்சிகள் கொடுக்கலாம்
அவர்கள் நகம் கடிப்பதைக் கண்டால் விரல்களுக்கு, கைகளுக்கு என சில சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் கொடுத்து அவர்களின் சோம்பேறித் தனத்தை திசை திருப்பி சுறுசுறுப்பாக்கலாம்.
குடும்பமாக ஒன்றாக இருத்தல்
குழந்தை பெரும்பாலும் தான் தனிமையை உணர்ந்தாலும் நகம் கடிக்க வாய்ப்புகள் உண்டு. எனில் அவ்வப்போது குழந்தையுடன் இணைந்து ஓவியங்கள் வரைவது, குழுவாக இணைந்து சின்னச் சின்ன விளையாட்டுகள் விளையாடுவது, கதை சொல்வது என அவர்களுடனான குடும்ப நேரத்தை அதிகரிக்கலாம்.
தகுந்த நிபுணரைச்சந்தியுங்கள்
இவற்றில் எதைச் செய்தும் குழந்தையின் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை எனில் தகுந்த மனநலம் சார்ந்த நிபுணரைச் சந்திப்பது நல்லது. ஏனெனில் எதைச் செய்தும் குழந்தை நகம் கடிப்பதை நிறுத்தவில்லை எனில் ஏதோ பெரிய பிரச்னை குழந்தைக்கு இடையூறாக இருக்கிறது என அர்த்தம். அதற்கான சிகிச்சை அல்லது வழிகள் செய்வது நல்லது.
– கவின்.